கடவுளைக்கண்டேன் – இந்துமகேஷ்

„கடவுள் இருக்கிறாரா? “திடீரென ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஒரு எட்டுவயதுச் சிறுவன்.என்னிடமிருந்து ஒரு பதிலை – அதுவும் தான் விரும்புவதான ஒரு பதிலை எதிர்பார்ப்பவன் போன்ற பாவனையுடன் நின்றிருந்தான் அவன்.„ கடவுளா? அப்படியென்றால்? “நான் திருப்பிக் கேட்டேன்.என்னிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் எனது மறுகேள்விக்குப் பதிலைத் தேடிக் கொண்டிருந்தான்.“ கடவுள்.. கடவுளைத் தெரியாதா? கடவுள்தான்! …அதற்குமேல் என்ன சொல்வது என்று புரியாமல் தனது தலையைச் சொறிந்துகொண்டான்.“ உங்களுக்குத் தெரியும் சொல்:லுங்கள்! கடவுள் இருக்கிறாரா? ”மறுபடியும் அவன் தன் கேள்விக்குப் பதில்தேட முயன்றான்.இவனுக்கு எப்படிப் புரியவைப்பது?“ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் கடவுள் என்றால் என்னவென்று சொல்! ” என்றேன் மீண்டும்.அவனது முகத்தில் சட்டென ஒரு ஒளி பிறந்தது.“ எனக்கு விளங்கிவிட்டது. கடவுள் இல்லை… என்ன? ”நான் ஏதும் சொல்லாமலேயே தான் என்னிடமிருந்து எதிர்பார்த்த பதிலை தானாகவே எடுத்துக்கொண்டான் அவன்.“ நீ நினைத்தது சரிதான். கடவுள் என்று எதுவுமே இல்லை! ”- நான் அழுத்திச் சொன்னதும் அவன் என்னைச் சந்தேகத்தோடு பார்த்தான்.“ கடவுள் இருக்கிறார்.. என்ன? “ அவனே திருப்பிக் கேட்டான்.„ நீ சொல்வது சரிதான்.. கடவுள் இருக்கிறார்! “ என்றேன்.அவன் முகத்தில் இப்போது ஒரு குழப்பம் தெரிந்தது.„ ஒன்றைச் சொல்லுங்கள். இருக்கிறாரா இல்லையா? „„ நான் சொல்வது இருக்கட்டும்..நீ முதலில் சொல்.. கடவுள் என்றால் என்ன?“ என்றேன் நான் மீண்டும்„ உங்களுக்குத் தெரியாதா?…கடவுள் என்றால் கடவுள்தான்!“„ ஓ.. அந்தக் கடவுளைப் பற்றிக் கேட்கிறாயா? “„ எந்தக் கடவுள்:?““ நீ சொன்னாயே அந்தக் கடவுள்!”“ நான் எந்தக்கடவுளைச் சொன்னேன்? கடவுள் என்றால் கடவுள்தான் என்றேன்!” என்றான் அவன் தடுமாற்றத்துடன்.“ அதைத்தான் நானும் சொல்கிறேன். அந்தக் கடவுள்தான்!” என்றேன் நானும் விட்டுக்கொடுக்காமல்.“ அப்போ கடவுள் இருக்கிறார்.. என்ன? “ என்றான் அவன் மீண்டும்.“ கடவுள் இருப்பதால்தானே நாம் கடவுளைப் பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்! ” என்றேன்.“ முதலில் இல்லை என்றீர்கள்…? ” அவன் தயங்கினான்.“ நான் எப்போ சொன்னேன்.. நீதான் சொன்னாய்”“ நானா.. எப்போது சொன்னேன்?”“ கடவுள் இருக்கிறாரா என்று கேட்டது நீதானே…? கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் வந்ததால்தானே நீ அப்படிக் கேட்டாய்…? ”“ சரி.. கடவுள் இருக்கிறார் என்றால் இப்போது அவர் எங்கே? ”“ இங்கேதான்! ” என்றேன்.„ இங்கேயா..? ” அவன் ஆச்சரியத்துடன் கண்களை அகலவிரித்தான்.“ இங்கே என்றால் எங்கே? ““ இதோ இங்கே! ” என்று அவனைச் சுட்டினேன்.„ இது நான்..! என்னையா கடவுள் என்கிறீர்கள்? “„ நான் உன்னைச் சொல்லவில்லை.. நீ இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறேன்! “„ அது எப்படி முடியும் இங்கே நான் இருக்கிறேனே! “„ இங்கே இருப்பது நீதானா? அதெப்படி உறுதியாகச் சொல்கிறாய்?“„ இது நான் என்பது எனக்குத்தெரியாதா என்ன?“„ இது நீதான் என்பது உனக்கு எப்படித் தெரியும்? உன்னை உன்னால் பார்க்க முடியுமா?உனது முகம் உனக்குத் தெரிகிறதா? “„ ஆனால்.. இது நான்தான்! “ அவன் தயக்கத்துடன் சொன்னான்.„ உன்னை உன் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் உனக்கு என்னைத் தெரிகிறது.. எனக்கும் இப்படித்தான் என்னை எனக்குத் தெரியாது.. ஆனால் உன்னைத் தெரிகிறது! உன்னை உன்னால் பார்க்கமுடியாதவரை உன்னருகில் இருக்கும கடவுளையும் நீ பார்க்கமாட்டாய்… ஆனால் உன்னைப் பார்க்க முடிந்த எனக்கு உன்னருகில் கடவுள் இருப்பதையும் பார்க்கமுடிகிறது! “„ உண்மையைத்தான் சொல்கிறீர்களா? மெய்யாகவே கடவுள் என்னருகில் இருக்கிறாரா?“அவன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கேட்டான்.„ மெய்யாகவே இருக்கிறார்…அவர் உன்னருகில் வந்ததால்தான் நீ அவரைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தாய்! “„ அப்படியென்றால் கடவுள் இதற்கு முன்பு எங்கே இருந்தார்? “„ நீ பிறப்பதற்கு முன்பு எங்கே இருந்தாயோ அங்கே? “„ நான் பிறப்பதற்கு முன்பு எங்கிருந்தேன்? “„ அது கடவுளுக்குத்தான் தெரியும்! “ என்றேன்.„ ஓ.. அதுதான் கடவுளா? “ என்றான் அவன் ஆச்சரியத்துடன்.-இந்துமகேஷ்