கண்ணில் தெரியும் கனவுகள் !கவிதை -வேலணையூர் ரஜிந்தன்.

சிந்தனைச் சாறு பிழிந்து
கற்பனைச் சுவாலையில் எரித்து
கண்களில் கொஞ்சம்
இதயத்தில் கொஞ்சம்
கனவுகள் பதித்து தவித்திருக்கிறேன் !

ஏக்கத்தின் வெளிப்பாடுகள்
ஏகாந்த இரவுகள் தோறும்
எண்ணத்தின் தொழிற்பாடுகள்
விடியாத விடியலின் காத்திருப்புக்கள் !

துயரங்கள் சுமந்த விழிகள்
துன்பங்கள் துளைத்த நெஞ்சம்
நிம்மதி தேடும் தூங்காத இரவுகள்
வாழ்வின் சாபங்கள் சுமந்து
நடை பயிலும் நாட்களின் முடிவிலிகள் !

யுத்தத்தின் சத்தங்கள் ஓய்த்தாலும்
ஓய்தாகவில்லை ;
ஈழத்தில் இன்னல்களின் சீற்றங்கள் !

அக்கினி மேட்டிலும், முட்களின் புதரிலும்
கந்தகப் புகையில் வேகிய உடலம் !
எறிகணைகள் ஓசைகளில் நடுங்கிய பயணம்
உயிருக்காய் ஓடிய கணப் பொழுதுகள் !

பிணங்கள் விதைக்கப் பட்ட தேசத்தில்
உதிரங்கள் ஆறாய் ஓடிய காட்சிகள் !
மீளாத துயரத்தில் மீட்சி தேடித் தவிக்கும்
தமிழன் கண்களின் ஓரத்தில்
மிஞ்சியதில் பனிக்கும் ஒரு சில கண்ணீர்த் துளிகள் !

– வேலணையூர் ரஜிந்தன்.