கண்ணீர் அஞ்சலி என்பது ஒரு வார்த்தை அல்ல!கவிதை – அனாதியன்-

கண்ணீர் அஞ்சலிகளை
கடந்து செல்வது அத்தனை
சுலபமல்ல
கண்ணீர் அஞ்சலி என்பது
ஒரு வார்த்தை அல்ல
வலியின் இறுதி விண்ணப்பம்
அந்தக் காகிதம் தாங்கிவருவது
ஒரு நிழல்ப்படமல்ல
ஆயிரம் உயிர்களின் அன்பில்
உருப்பெற்ற ஆவணம்

கண்ணீர் அஞ்சலிகளை
காலில் மிதித்துவிட்டு
இயல்பாக நகர்கிறோம்
அதுவே எமது தாய் எனில்
அதுவே எமது தந்தையெனில்
அதுவே எமது நெருக்கமெனில்
அக்கணம் நிகழ்ந்தேறிய
பாவத்தை எங்கு கழுவ

மரணத்தின் போது
அழுகிற ஒருவனை
அழாதே என்று சொல்வதைப்போல
கொடுமை ஏதுமில்லை
மரணவீடொன்றை கடக்கும்போது
அத்தனை இயல்பாக
இருக்கமுடிவதில்லை

யாரோ ஒருவரது மரணம்
யாரோ ஒருவரை
வெகுவாக சிந்திக்கவைக்கிறது
யாரோதானே மரணிக்கிறார்கள்
என இயல்பாக இருக்கிறோம்
எங்களை மரணமற்றவர்கள்
என நினைத்தபடி
மமதையோடு…

ஒரு மரணம் எனை
அதிகம் கவலையுறச் செய்கிறது
என் சினேகிதியொருத்தியின்
கண்ணீரில்
மீண்டுமொரு ஞானம்
என் கண்முன் விரிகிறது

– அனாதியன்-