காதல் விதி! -இந்துமகேஷ்

என்னைக்கடந்து எனக்குள்ளேபோய் என்னைக் கண்டுகொண்ட நானும்
உன்னைக் கடந்து உனக்குள்ளே போய் உன்னைக் கண்டுகொண்ட நீயும்
இருவரும் சந்தித்துக் கொள்கிறபோது ஒருவரில் ஒருவர் கலந்துபோகிறோம்
நம்மைப் பிணைக்கும் அன்பில்கரைந்துபோகிறோம்.
இரண்டு நீர்த்துளிகள் கலந்துகொள்வதுபோல்!
எல்லா நீர்த்துளிகளும் ஐக்கியப்பட்டு கடல் என்னும் ஒரு பெயர் பெறுவதுபோல் எல்லா உயிர்களும் கடவுள் என்னும் ஒரு சக்திக்குள் ஐக்கியப்பட்டுவிடுகிறது.
பிறகு நான் என்பதும் நீ என்பதும் அங்கில்லை.
காதல் என்பதும் இதுதானே!

காதல் பலருக்கும் பலவிதமாகத் தோற்றம் காட்டும்.
பரம்பொருளை ஆண் என்றும் ஆன்மாக்கள் எல்லாம் பெண் என்றும் வேதங்கள்
சொல்கிறதாம்.
ஆண் – சிவம்
பெண் – சக்தி
சிவமும் சக்தியும் பரம்பொருளும் ஆன்மாவும்.

பெண்ணே சக்தி உலகைப் படைத்த சக்தி! உலகை இயக்கும் சக்தி!
உலகை வாழவைக்கும் சக்தி! அந்தச் சக்தியை ஆள்பவன் ஆண்.
ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பது அவளது சக்தியின் வலிமையைச் சொல்லும். நன்மைகள் ஆவதும் தீமைகள் அழிவதும் பெண்ணால்.

நன்மைகளை ஆக்குவதற்கும் தீமைகளை அழிப்பதற்கும் சக்தி வேண்டும்.
ஆனால் இந்த நன்மை தீமை என்பதும் சக்தியின் வடிவங்கள்தாம்.
இப்படி ஒன்றுக்குள் ஒன்றாய் இரண்டறக் கலந்துவிட்ட சக்தியாய் இந்த உடல்.
இதனை வழிநடத்தும் சிவமாய் உயிர்.

காதலில் பலவகை உண்டு. அதில் கண்டதும் காதல் என்பதும் ஒருவகை.
கண்டதும் காதலா? ஆம் கண்டதும் காதல்தான். காணாமல் எப்படிக் காதல் வரும்.
இங்கே காண்பது என்பது வெறும் விழிகளால் அல்ல.
என்னுள் இருக்கும் என்னையும் உன்னுள் இருக்கும் உன்னையும் நமது விழிகளால்
எப்படிக் கண்டுகொள்ள முடியும்?
நம்மை நாம் உணர்தல் என்பது உடலுக்கு வெளியே நிகழ்வதல்ல. நமக்குள்ளே நிகழ்வது. எனக்குள்ளே என்னைக் கண்டுகொண்ட நானும் உனக்குள்ளே உன்னைக் கண்டுகொண்ட
நீயும காதல் வசப்படுகிறோம்.
ஆம் நம்மை நாமே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறோம்
.
என்னுள் இருக்கும் என்னை என்னால் காதலிக்க முடியவில்லை என்றால் இன்னொரு உயிரை என்னால் காதலிக்க முடியாது என்பதே நிஜம்.
இந்த உண்மை பலருக்கும் புரிவதில்லை. தன்னைத்தான் காதலிக்காதவர்கள் பலரும் மற்றவரைக் காதலிப்பதாகச் சொல்லிக்கொண்டு ஆப்பிழுத்த குரங்காக அவதிப்படுகிறார்கள். முதலில் என்னுள் இருக்கும் என்னை நான் காதலிக்கக் கற்றுக்கொண்டாகவேண்டும்.
காதல் என்பது கற்றுக்கொள்வதா?
ஆம் அது அப்படித்தான்.
எல்லாமே பயிற்சியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. மனித வடிவம் எடுத்த நாள்முதலாய் அழுவது சிரிப்பது தவழ்வது நடப்பது பேசுவது பாடுவது எல்லாம் பயிற்சியில்தான் ஆரம்பிககிறது. காதலும் பயிலப்படவேண்டியிது. முதலில் நான் என்னையும் நீ உன்னையும் காதலிக்கப பயில்வோம். என்னை நான் முற்று முழுதாகக் காதலிக்கப் பயின்றுவிட்டால் என்னை முழுதுமாய் நான் தெரிந்துகொண்டு விடுவேன். என்னை நான் அறிந்துகொண்டபின் உன்னை நான் அறிவதில் அதிக சிரமப்படவேண்டியதில்லை. காதல் என்பது இலகுவானதாகிவிடும். காதல் என்பது தெய்வீகமானது என்பது இதைத்தான்.
ஆனால் பலரும் காமமே காதல் என்று கருவதால் காதல் தெய்வீPகமானது என்பதை மறுதலிக்க முனைகிறார்கள்.

காதல் தெய்வீகமானது! தெய்வீகமே இங்கு காதலானது.
என்னை நான் கண்டுகொள்வது என்பதும் உன்னைநீ கண்டு கொள்வது என்பதும் சொல்வதற்கு சுலபம்தான் ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா? இல்லை என்பதனால்தான் இத்தனை ஆலயங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என்று உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன.
ஆனால் பெரும்பாலும் அவைகள் வெறுமையாய்க் கிடக்கின்றன பல இடங்களில்:
தன்னைத்தான் கண்டுகொள்ள முயலாதவரையில் இந்த வெறுமை நீங்கப்போவதில்லை
ஒவ்வொருவரும் தம்மைத்தாம் மறந்த நிலையில் வெளியுலகில் தம்மைத் தேடுகிறார்கள். அதனால்தான் இப்படி.

ஒரு மனிதர் எப்போதும் தியானத்தில் இருப்பார்.
தன்னுடைய வீட்டிலிருந்தபடியே உலகத்தின் எந்தப்பகுதியில் என்ன நடந்தாலும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவருக்குத் தீர்க்கதரிசனம் வாய்த்தது.
ஒருநாள் காலை வீட்டின் வெளித்திண்ணையில் உட்கார்ந்து கண்களைமூடித் தியானம் செய்துகொண்டிருந்தவர் திடீரெனக் கண்விழித்தார்.
வீட்டினுள் ஏதோ அலுவலாக இருந்த மனைவியிடம் சத்தம்போட்டுச் சொன்னார்.
„இந்த ஊரிலிருந்து அறுநூறு மைல் தூரத்துக்கப்பால் இப்போது ஒரு விமானம விழுநது நொருங்கிக் கொண்டிருக்கிறது என்னால் அதைக் காணமுடிகிறது. என் தியான சக்தியைப் பார்த்தாயா?“

உள்ளே இருந்த மனைவி அப்போது ஆத்திரத்தோடு அலறினாள்:
„அறுநூறு மைல் தூரத்துக்கப்பால் நடப்பது தெரிகிறதா? நமது வீட்டுத் திண்ணையிலிருந்த நமது குழந்தை உருண்டு விழுந்து மண்டையில் காயம்பட்டு இத்தனை நேரமாய் நான் அலறிக்கொண்டிருக்கிறேனே அது தெரியவில்லையா?“

இப்படித்தான் காரியங்கள் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கின்றன.
உள்வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாதவன் உலகத்துக் காரியங்கள் பற்றி அக்கறை காட்டுவதும் தனக்குள் என்ன நிகழ்கிறது என்று தெரியாதவன் தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட முயல்வதும் வெறும் கேலிக்குரியதாகவே முடியும்.

தன்னைத்தான் காதலிக்காதவன் தான் காதல் வசப்பட்டிருப்பதாகச் சொல்வதும் இதுபோல் ஒரு கேலிக்குரிய சங்கதிதான். என்னை நீயும் உன்னை நானும் காதலிப்பதற்குமுன் உன்னை நீயும் என்னை நானும் காதலித்தாகவேண்டும் என்பதே விதி.
இது காதல்விதி!