கார்த்திகை பூத்திருக்கிறது…

காரிருள் கரைகிறது
கொஞ்சம் மஞ்சள் பூசி 
நகர்கிறது நீரோடை…

ஒளியும் ஒலியும்
யுத்தம் நடத்துகிறது
சத்தங்கள் எமக்கு
பழகிப்போன சங்கதி…

தாவாரப் பக்கமாக
உடலை ஒடுக்கியபடி
ஒன்றுகூடிக் கொள்கின்றன
வளர்ப்புப் பிராணிகள்…

கோலம் வரைந்தபடி
வெள்ளத்தில் எதையோ
நிதானமாகத் தேடுகின்றன
நாக்கிளிப்புழுக்கள் சில…

ஒற்றைப் பனையில்
காலாவதி ஆகிறது
ஈரம் ஊறிய பனையோலைகள்…

படலைப் பக்கமாக
வெள்ளைக் குடை பிடித்து
நிமிர்ந்து நிற்கிறன சில காளான்கள் !

புத்துயிர் பெற்ற சில
பூச்செடிகள் இன்றுதான்
புன்னகை தூவுகின்றன…

கிணற்றடி வேலியோ
யாகத்தீ வளர்க்கிறது ;
ஆம் அது…
கார்த்திகை பூத்திருக்கிறது !

– வேலணையூர் ரஜிந்தன்.