காலத்தை வென்று நிற்பவர்கள் கலைஞர்கள். ,இன்று கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு நாள்.

காலத்தை வென்று நிற்பவர்கள் கலைஞர்கள்.

இன்று கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு நாள்.

காலத்தை வென்று நிற்பவர்கள் கலைஞர்கள்.
இவ்வாறு காலத்தை வென்ற ஒரு கலைஞனாக நம்மத்தியில் நிலைத்திருப்பவர்,
நிழல் படங்கள் வழியாக நினைவில் நிறைந்திருப்பவர் ‘அண்ண றைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்.

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஐந்து ஆண்டுகள்.
ஆனால் அவர் எங்கள் நினைவுகளிலிருந்து நீங்கிவிடவில்லை.

இலங்கை வானொலி, மேடை,திரைப்பட, தொலைக்காட்சிக் கலைஞர் என மேடைகளில் நாம் விழித்து அழைத்து மகிழ்ந்த,மகிழ்வித்த நினைவுகள் மறையவில்லை.

ஒரு தனி நடிப்புக்கலைஞனாக தனது அன்பு இரசிகர்களை அரங்கங்களில், ஆலயத்திருவிழாக்களில், திறந்தவெளிகளில் சிரிக்க வைத்து மகிழ்வூட்டிய அந்த இனிய இரவுகள் மறையவில்லை.

70களின் மத்தி, அன்றைய இளையோரின் இரசனைக்கு விருந்தளித்தவர்.

இலங்கை வானொலியில் எண்ணற்ற நாடகங்கள்.
அன்றைய இலங்கை வானொலி நேயர்கள் யாரைக்கேட்டாலும் சொல்வார்கள் ‘தணியாத தாகம்’ நாடகம் பற்றி.

அந்த நாள்களில் பல்லாயிரக்கணக்கான நேயர்களை வானொலியோடு கட்டிப்போட்டது.

அது போல ‘கிராமத்துக் கனவுகள்’ என்ற வானொலித் தொடர் நாடகமும் பாலச்சந்திரன் அவர்களுக்குப் பெயரும் புகழும் பெற்றுக்கொடுத்தது.

வாடைக்காற்று,புதியகாற்று ஆகிய திரைப்படங்களில் நடித்தார். வாடைக்காற்று திரைப்படம் பாலச்சந்திரன் அவர்களைப் பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் நாடிட வைத்தது.

இவ்வாறு ஈழத்துக் கலைத்துறையில் புகழீட்டி வாழ்ந்த கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் புலம் பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்ந்து வந்த வேளையில் நோய்வாய்ப்பட்டு மரணமானார்.

இன்று அப்பெரும் கலைஞனின் நினைவு சுமந்து நிற்கின்றோம்