குறிஞ்சிக் காதல்…

காதல் ஓங்காரம் இசைத்த மலையை
மனதால் பல முறை உரசினேன்.
கனவு மஞ்சத்தில் தலை சாய்த்த கலையை
ஏதோவொரு பாட்டில் உளறினேன்.
அடம் பிடித்த அன்பால் ஒரு ஆசை
அதற்கு காதலென்று பெயர் சூடினேன்
அன்பு சுமக்கும் கலியுகத்தில்
அன்பாளனாய் நின்று அவளைப் பாடினேன்.

சாட்சிகள் இல்லாத சத்திய யாகமிது
சரி பிழை அறியாத வேள்வி.
சாரல் காற்றின் குறிஞ்சிக் குரலது
சாமரக் காற்றை அனுபவித்த ஞானி.
விழி எறிந்த பார்வை விம்பத்தில்
விளக்கேற்றிய அழகியல் அவள்.
விசையாக எனக்குத் துணையாகு என
நான் வேண்டும் இறைவி அவள்.

எழுதிய கவிதையில் தரம் தந்த புதுமையில்
சுமங்கலியானாள் என்னுயிர் மூச்சால்.
ஏற்றமோ தாழ்வோ எதுவாக ஆயினும்
சுரமென ஆகுது அவள் உயிர்ப் பேச்சால்.
பச்சையப் பசுமையில் பனி விழும் போதிலும்
உச்சியின் சூட்டில் உலையேற்றும் குடிமகள்.
பண்பட்டு உயிர் வாழ உயிர்க் கரமாகுவாள்
என்னுயிர் நெஞ்ச மலைக் கொடிப் பூமகள்.

கலைப்பரிதி.