குளிர்ந்து வந்தாள் குமரி மழை…

துளித் துளி விரலால்
உயிர் தொட்டு நனைப்பாள்.
குளிரிடும் உறவால்
உடல் கட்டி அணைப்பாள்.
மனவெளி மார்பிலே
ஈரமாய்த் தரிப்பாள்.
மழையவள் உலகிலே
கடவுளாய் சிரிப்பாள்.

செந்தூரம் வீசும்
செல்லக் கிறுக்கி அவள்.
செம்மொழி பேசும்
வல்ல அழகி அவள்.
கவிதைகள் வந்தாடக்
கருவாக நிறைந்தவள்.
காதலர் நெஞ்செல்லாம்
உணர்வள்ளி நின்றவள்.

அகம் புறம் யாவிலும்
அவளொரு அதிசயம்.
அடை மழை வடிவிலே
உணர்வுகள் புதுயுகம்.
சாரலின் சத்தங்கள்
சந்தன முத்தங்கள்.
யாவையும் வெல்லுமே
அவளிடும் யுத்தங்கள்.

கலைப்பரிதி.