கே. எஸ். துரையின் 30 ஆண்டு நினைவுகள்

வடமராட்சி இழப்புக்கள் 30 ஆண்டு நினைவுகள்.. அன்றே எழுதிய எனது இரண்டு நாவல்களுக்கும் வயது 25..

1987 ஒப்பிரேசன் லிபரேசன் தாக்குதலில் எமது குடும்பத்தை சேர்ந்த அப்பாவி குடும்பத்தலைவர்கள் பலர் பலியானார்கள். எனது மைத்துனர், தம்பி, உறவினர், உற்ற நண்பன் என்று ஒரு மணி நேர இடைவெளியில் ஆறு மரணச் செய்திகளை விட்டுவிட்டு தாங்க வேண்டியதானது.

இன்று முப்பதாண்டுகள் சொந்த நாட்டையும் இழந்தாயிற்று, வாழ்ந்த வீடும் இடிந்து தரைமட்டமாகக் கிடக்கிறது..

வெளிநாடுகளில் இதுபோன்ற தாக்குதலை சந்திக்காத பலர் நடத்தும் ஈழ வரலாற்று வகுப்புகளும், தமிழக தலைவர்கள் நடத்தும் ஈழ முழக்கங்களும், ஒரு துப்பாக்கி குண்டால் வரும் ஆபத்தை நேரில் உணராது பாதுகாப்பு எடுத்துக்கொண்டு சில புலம் பெயர் தமிழர்கள் தன் சக தமிழனுக்கு கட்டும் புலம் பெயர் துரோகிப்பட்டங்களும் நிறையவே பார்த்தாயிற்று..

அனைவருக்கும் நன்றிகள்.. இன்று யார் மீதும் கோபம் இல்லை.. ஆனால் சொல்லப்பட வேண்டியவை..!

இதெல்லாம்; உங்களுக்கு தேவையா என்று ஒரேயொரு மகனை இழந்து மரணித்த ஒரு பூ நாவலில் தாய் கேட்கும் கேள்வியை நாவலாக பதிந்திருந்தேன்..

இலங்கைத்தீவு தனது ஒரு மில்லியன் உழைக்கும் வர்க்கத்தையும் ஆற்றலாளர்களையும் இழந்து போனது தமிழ் சிங்கள தலைமைகளின் தோல்வியே…

கடந்த 32 வருடங்களாக எனது உழைப்பில் 40 வீதத்தை டென்மார்க் நாட்டுக்கு வரியாகக் கட்டி வாழ்ந்து வருகிறேன்..

என் உழைப்பாலும், அறிவாலும் இலங்கை என்ற அழகிய தீவில் ஓர் அமைதி வாழ்வை ஏற்படுத்த முடியாது போன சோகம் ஈடு செய்ய முடியாதது..

இதில் வென்றவர் யார் தோற்றவர் யார்..?

இதே கருத்தை அடிப்படையாக வைத்து வடமராட்சி தாக்குதல்களை இரண்டு நாவல்களாக எழுதியிருந்தேன்..

அன்று இதெல்லாம் தேவையா என்று கேலி செய்த பல எழுத்தாளர்கள் இன்றுவரை இது குறித்த தமது பதிவுகள் எதையும் செய்யவில்லை.. சிலர் எழுதாமலே இறந்துவிட்டார்கள்.

எழுத்தாளனாக காலத்தை பதிவு செய்தேன் என்ற திருப்தியை எனது இரண்டு நாவல்களும் தருகின்றன.

காலத்தை வென்றவன்…!