கொரோனா பாப்பாப் பாட்டு

வேது பிடித்துவிடு பாப்பா – அதில்
வேப்பிலை தவிர்க்காதே பாப்பா.
கூடி நில்லாதே பாப்பா – உனை
கொரோனா அண்டாது பாப்பா.
இருமல் தும்மல் சளியிருந்தால் – அதை
இல்லாமல் செய்துவிடு பாப்பா.
வீணான சந்தேக அயலாரால் – உனக்கு
விசாரணை வந்துவிடும் பாப்பா.
சுடுநீர் தினமும் அருந்தல் – உன்
சுகத்திற்கு நல்லதடி பாப்பா.
கொடுங்கிருமி தொட்டிட முன்னே – உனை
சுத்திகரித்து கொள்ளுநீ பாப்பா.
வெளியே போய்வந்த உடனே – உன்
வீட்டினுள் நுழையாதே பாப்பா.
துளியான தொற்றுநீக்கி இட்டு – கைகள்
சுத்தம் செய்துவிடு பாப்பா.
பயணத்து வேளை முகக்கவசம் – யார்க்கும்
பாதுகாப்பு மிக்கதடி பாப்பா.
பரபரப்பு பகுதிகளை கண்டால் – அங்கு
பறந்துபோக விரும்பாதே பாப்பா.
தனிமைப் படுத்தலுனக்கு வந்திடிலோ – நீ
தளந்து கொள்ளாதே பாப்பா.
ஒழித்து விடலாம் கொரோனாவை – ஏற்ற
உணவு எடுத்துவிடு பாப்பா.
சமூக இடைவெளி பாப்பா – நமக்கு
தந்திடும் காப்படி பாப்பா.
சலிப்பு எதற்கடி பாப்பா – கொரோனா
சாகணும் நம்மாலே பாப்பா.
அறிவுரையான மூலிகை பாவனை – உன்
ஆரோக்கியத்திற்கு நல்லதடி பாப்பா.
பரிந்துரையா மருந்துகளை சுயமாய் – நீ
பாவிப்பதை தவிர்த்துவிடு பாப்பா.
ஊரடங்கு வேளைதனில் வெளியே – நீ
உலவிட போகாதே பாப்பா.
பேர்கெட்டு போகுமடி பாப்பா – அது
பெருஞ்சிக்கல் தந்துவிடும் பாப்பா.
வீடிருக்கும் நாட்களிலே பாப்பா – காணி
விவசாயம் தொடங்கிவிடு பாப்பா.
கூடவாய் நிவாரணம் கிடைத்தால் – கொஞ்சம்
கொடுத்துமே மகிழ்வுகொள் பாப்பா.
சும்மா இருக்கையில் மனவழுத்தம் – உனை
சூழ்ந்திடவே பார்க்குமடி பாப்பா.
சோம்பல் மனமதை தூரவைத்து – நல்
சுறுசுறுப்பு வேலைசெய் பாப்பா.
கடவுள் கருணையடி பாப்பா – அது
கனமான மருந்தடி பாப்பா.
துயரம் விலகிடும் பாப்பா – இறை
துதியை நம்பிவிடு பாப்பா.
-யோ.புரட்சி-