சக்தி சக்திதானின் மீண்டும் என்னை மறக்கும் வரை !

அந்திமாலை நேரம், அந்திவானச் சிவப்பு, முல்லைவனப்பூங்கா கொடியிடைக் கோதையவள் காதல் கொந்தளிப்புடன் உணர்ச்சிகளோடு போராடுகிறாள்.

நாட்டைக் காகும் ஒரு போர்வீரன், தீரம் கொஞ்சும் வீரமுர்ற நெஞ்சம் கொண்ட ஏறு போல் பீடுநடை கொண்ட இளவழுதிப் பேரழகன்.

கண்டது ஒரு பொழுதுதான் கோதையின் விழிகளும், காளையின் விழிகளும் மோதலுடனான கலத்தலினால் காதல் சுகிப்பில் கலந்து விட்ட வேளையது.

கண்டதும், அவள் நெஞ்சைக் கொண்டதும் புரிந்ததுவோ இளநெஞ்சத்து வாலிபனுக்கு? புரியாத உணர்வுகள் புதிதாகப் புலரவிட்ட பருவ அலசலின் பாரிய வினாக்களுக்கு விடையின்றிக் காதல் விரகதாபத்தில் விழுந்து தவித்தாள் கருங்குழலாள்.

தென்றலைக் கேட்கின்றாள், தேடிவரும் முல்லைமலர் வாசனையை முகர்ந்து பார்த்து விட்டு என் மன‌க்காதலின் சுகந்தமும் என்னுள்ளக் கள்வனைக் கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்டதுவோ என்றே ஏங்கித் தவிக்கின்றாள் !

மென்மையான மலர் போன்ற மனங்கொண்ட கன்னியல்லவா? நெஞ்சத்தின் ஓரங்களோடு உரசும் உணர்வலைகள் எழுப்பும் ஓலம் அது என்ன இன்ப ஓலமா?

இலவம் பஞ்சு போல நான்

இதுவரை கலமும் காத்து வந்த‌

இதயமது ஒரு நொடியில் …….

ஆமாம் ஒரு கணப் பொழுதினில்

அவன் வசமாகிய விந்தை என் சொல்வேன் ?

போதுமடி இன்ப வேதனை

சின்னஞ் சிறிய இதயமல்லவா ?

சித்திரப் பூம்பாவையெந்தன் உளந்தனை

சிதைத்த இப்பெருங் காதலை

எப்படிச் சுமக்கப் போகிறது ?

சொல்லடி என் தோழி ?

தோழியை நோக்கி வீசும் அவள் கேள்வி பிறந்தது எப்படி என்கிறீர்களா?

தோட்டத்தின் அடியில் துல்லியமாய் நிற்கும் மாபெரும் பாலாவைக் கண்டாள். அதன் கிளைதனிலே பெரியதோர் பலாப்பழத்தைத் தாங்கி நிற்கும் சிறியதோர் காம்பினைக் கண்டாள். விரிந்தது அவள் எண்ணச் சிறகு. காதல் வயப்பட்டவளல்லவா அவள் எதையுமே தன் மனக்காத்லோடு ஒப்பிடும் பருவமல்லவா ?

துளிர்த்தது எண்ணம் அவள் மனதில்,

அடேயப்பா ! இத்தனை பெரிய பலாப்பழத்தை எப்படி இந்தச் சிறிய காம்பு தாங்கும்? இப்பெரிய பலா நான் என் தலைவன் மீது கொண்ட காதலுக்கு ஒப்பானதானால் அதைத் தாங்கும் என் மனம் அக்காம்பைப் போல சிறியதல்லவா? அதனால் தான் என் காதல் எனக்கு இத்தனை வலிக்கிறதோ ?

எப்படி இந்த வலி போகும் ? அவளின் திருமணத் தேதியைச் சீக்கிரம் குறித்தாலன்றி இக்கன்னி தன் காதல் வேதனையிலிருந்து மீள முடியுமா? அதுவும் இப்பெரிய பலாப்பழத்தைத் தாங்கும் அக்காம்பின் சுமையைப் போன்றதுதானே அவளது மனமும் அதுதாங்கும் இம்மாபெரும் காதலும் !

ஆகா ! எம் சங்க காலத்துப் புலவர்களின் கற்பனைக்குத்தான் ஈடு உண்டோ ? காதலையும், அக்காதல் வயப்பட்ட கன்னியின் இன்ப வேதனையையும் என்ன அழகாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதோ இதனைச் சித்தரிக்கும் குறுந்தொகைப்பாடலைப் பார்ப்போம்,

வேரல்வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசினோரே! சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்

உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!

சொற்களின் பொருளைப் பார்ப்போமா !

வேரல்வேலி : மூங்கிலில் ஆன வேலி

வேர்க்கோட் : வேரில் பழுத்த

பலவின் : பலா மரங்களை

சாரல் நாட! : மலை நாடனே

செவ்வியை : நல்ல நாளை, திருமண நாளை,

ஆகுமதி! : சீக்கிரம் ஆக்கு, – என் திருமண நாளைக் குறித்து விடு

யார் அஃது : யார் அதை

அறிந்திசினோரே!:: அறிவார்கள் ?

சாரல் : மலை ஓரம்

சிறுகோட்டுப் : சிறிய காம்பில்

பெரும்பழம் : பெரிய பழம் (பலாப் பழம்)

தூங்கியாங்கு, : தூங்குவதைப் போல்

இவள் : இவளுடைய

உயிர்தவச் சிறிது, : உயிர், மனம், மனம் மிகச் சிறிது அல்லவா ?

காமமோ பெரிதே! : காமமோ (காதலோ) ரொம்ப பெரிது….

மீண்டும் என்னை மறக்கும் வரை

அன்புடன்

ஆக்கம் சக்தி சக்திதாசன் லண்டன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert