சர்மிலா வினோதினி அவர்கள் எழுதிய ‚மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்‘ சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு16.07.2019,

ஈழத்தின் போருக்குப் பிந்திய பெண் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க, ர்மிலா வினோதினி அவர்கள் எழுதிய ‚மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்‘ சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வானது இன்று(16.07.2019, செவ்வாய்க்கிழமை) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இவரால் எழுதப்பெற்ற ‚இராப்பாடிகளின் நாட்குறிப்பு‘ கவிதைத் தொகுப்பு பற்றி ஏலவே எமது பார்வையை எழுதியிருந்தோம்.

நிறைவாழ்த்தொலிகள்.
இனிவரும் எழுத்துக்கள் வெற்றிச்செல்வி அவர்களினுடையவை.

::::::மொட்டப் பனையும் 
முகமாலைக் காத்தும்:::::::

சர்மிலா வினோதினி – 
அறிமுக உரை
::::::::::: :::::::::::::: ::::::::::::::
அனைவருக்கும் வணக்கம்.

மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும் கதை நூல், இராப்பாடிகளின் நாட்குறிப்பு கவிதை நூல் என்பவற்றின் ஆசிரியராகிய சர்மிலா வினோதினி அவர்களை இந்த மேடையில் அறிமுகம் செய்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

பெண்களின் பிரசன்னங்கள் குறைந்த இலக்கிய உலகிலே தற் துணிச்சலுடன் நிமிரும் பெண்களின் நம்பிக்கை சர்மிலா வினோதினி. செல்வரதி திருநாவுக்கரசு ஆகியோரின் முதல் தளிராக 1985 இல் கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பூனகரியில் பிறந்தவர் சர்மிலா. இவரது இளைய சகோதரி வினோதினி, தொடரும் நினைவுகளாய், மூப்பற்ற பிரிவின் பின்னும் இழையறாத உறவாக இவரது பெயரோடு இணைந்து வாழ்கிறார். இவருக்கு இருவர் இளைய சகோதரர்களாவர்.

இவரது தந்தைவழி பூட்டனார் தில்லையம்பலம் அவர்கள், காணி வழங்கி, ஆரம்பித்து வைத்த வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில் தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்தார். 5ம் ஆண்டில் சாவகச்சேரி அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் இணைந்து கல்விகற்றார். சில காலங்கள் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றிய தாயார் செல்வரதி அவர்களின் செல்லப்பிள்ளையான சர்மி தனது கல்விக்காக பெரியம்மா, அம்மம்மாவுடன் தங்கி வாழ்ந்த காலங்களும் அதிகம்.

கல்விக்காகவும் வாழ்தலுக்காகவும் என குடும்பங்கள் நீண்டகாலம் பிரிந்து வாழ நேர்ந்த போர்க்காலத்துள் பயணித்தவர் என்பதால் போரும் அதன் வலியும் வலிமையும் இவரை புடம்போட்டது. இவரது அம்மப்பா சரவணமுத்து முத்துக்குமார் அவர்கள் இலுப்பைக்கடவை மகாவித்தியாலயத்தின் முதலாவது அதிபராக இருந்ததோடு அப்பாடசாலையின் கால்கோளிலும் பிரதானியாக இருந்தவர். அவரது தடம்பதிந்த பாடசாலையில் சர்மிலா அம்மம்மாவுடன் தங்கியிருந்து சில காலம் கல்வி கற்றார். அதன் பின்னர் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில் இடப்பெயர்வுகளின் மத்தியில் மீண்டும் வேரவில் பாடசாலையில் சாதாரணதரம் பயின்று உயர்தரக் கல்வியை மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் பயின்றதோடு 2004இல் கலைத்துறையில் தோற்றினார்.

இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழும் கலை தெரிந்த தந்தையார் வயல்புலமும் மாடும் மனையுமுடைய இயற்கைச் செல்வந்தராக விளங்கியதால் சர்மிலாவின் இளமைக் காலங்கள் வயல்வெளியின் சுகந்தங்களை நுகர்ந்து, எல்லையற்ற ஆகாயத்தின் மீதான சிறகுவிரிப்புகளாய் பாலிலும் பாலாடையிலும் வளர்ந்த சுவைமிக்க நாட்களாய் இவரது வாழ்வை செழுமைப்படுத்தின.

முற்றத்து வேம்பும், கருங்காலி வாங்கும் ஓலைச்சுவடிகள் அடுக்கப்பட்ட ரங்குப் பெட்டியும் நெல்மூடைகள் சுமந்து வரும் வண்டில் வரிசைகளும், இவரது பிள்ளைப்பராய நினைவுகளில் நிறைந்திருக்கும் பொக்கிசங்கள்.

அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெற்றோர், உறவுகள் என்று வாழ்தலின் கலையை அறிந்த மூத்தோர்களின் அன்பிலும் கருணையிலும் வளர்ந்தவர் சர்மிலா வினோதினி. வாழ்க்கையின் சூட்சுமங்களை அறிந்த அவர்களின் மடியில் தவழ்ந்து உரிமை பாராட்டி வளர்ந்தவர்.

தரம் ஒன்றிலேயே சின்னஞ்சிறு பெண்ணாக மேடையில் தோன்றத் தொடங்கினார். புக்காராக்கள் வந்து குண்டெறிந்து நடுநடுங்கச் செய்த அந்தக் கொடிய நாட்களிடையிலும் தியாகத்தையும் வீரத்தையும் பாடியபடி விரியத் தொடங்கியது இந்தப் பறவையின் சிறகுகள். கிபிர்கள் குண்டெறிந்த பொல்லாத காலங்களில் உயிர் நடுங்க, ஒடுங்க வைத்த அந்தப் பொல்லாத பொழுதுகள், மறக்கமுடியாத ஓவியங்களை மனத்தில் வரைந்திருக்கின்றன. நான்கே வயதுப் பாலகியாய் இருந்தபோது தன் தாயாரின் கைப்பிடியில் பாதுகாப்புக்காய் ஓடியொழிந்த வாழை மரத்தையும் வைக்கற் போரையும்கூட அவள் இன்னமும் மறக்கவில்லை. உயிரைப் பறிக்கவென ஓங்காரமாய் உறுமிக்கொண்டு வந்த உலங்குவானூர்தியின் ஒலியும் அண்டை நாட்டிலிருந்து அகிம்சை என வந்தவர்கள் அதிலிருந்து நீட்டிச்சுட்ட துப்பாக்கியின் வேட்டொலியும் அந்தப் பிஞ்சின் மனதில் ஏற்படுத்திய உயிரச்சுறுத்தல் கூட, உயிர்தப்பிப் பிழைக்கின்ற கலையைத்தான் கற்றுக் கொடுத்திருக்கின்றது. தாயின் அணைப்பில் சிறகுகளை ஒடுக்கிக்கொண்டு இருந்த பாதுகாப்பு உணர்வு, மாலைநேர வகுப்பருகில் குண்டு விழுந்தபோது கிடைத்திருக்கவில்லை. மணல் மேட்டில் முளைத்திருந்த வெறும் கறிவேப்பிலைச் செடியைப் பிடித்துக்கொண்டு நிலத்தில் பதுங்கிக் கிடந்த அந்தச் சிறுவயது நினைவுகள் ஒன்றும் இனிப்பானவை அல்ல. உயிரை பற்றிக்கொண்டு கிளாலிக் கடலூடே பயணஞ்செய்த அந்த நாட்கள் கசப்பானவைதான், அவை மறக்கவொண்ணாத கசந்த பொழுதுகள் எனினும் சர்மிலா வினோதினி, பாடசாலை மேடைகள் தோறும் கவிதையும், கதையும், பேச்சும், நாடகமும், பாடலும், ஆடலுமென, கலைமகளாக மிளிர்ந்தார். சாதாரணதரம் கற்கும்போது மாவட்ட மட்டத்தில் கட்டுரையில் 2ம் இடம் பெற்றதற்காய் இவர் பெற்ற பரிசு ஒரு புத்தகம். அதன் பெயர் சுதந்திர வேட்கை. சுதந்திரத்தை அவாவுறும் சர்மிலா வினோதினியின் எண்ணற்ற எண்ணங்களின் திறவுகோல்களாக வாசித்தலைத் தொடர்ந்தார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டதாரி ஆனார். சமூக உளவியலும் ஆற்றுப்படுத்தலும், ஊடக தொடர்பாடலும் அறிவிப்புத்துறைசார் நுட்பங்களும் ஆகிய துறைகளில் பட்டய பட்டங்களைப் பெற்றுள்ளார். தற்போது கொழும்பு, ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முது விஞ்ஞானமாணி கற்கையைத் தொடர்கிறார். 2019 இவ்வாண்டின் டிசம்பரில், காட்டியலும் சுற்றுச்சூழல் முகாமைத்துவமும் முது விஞ்ஞானமாணியாக பட்டம் பெற்று பெற்றோருக்கும் உறவுகளுக்கும் மட்டுமல்ல மன்னாருக்ரும் ஈழத்தமிழ்ப் பெண்களுக்கும் பெருமை சேர்ப்பார்.

இவரது, காதல் மீதூறும் வாழ்வின் மீதான பாடல்களாக, காடுகளும் நதிகளுமாக, இயற்கை மீதூறி முகநூலில் பதிவிடும் கவிதைகளும் காட்சிகளும் இவரது வாழ்வின் பயணத்தை அறிய உதவுகின்றன. 
இதற்குள் அவர் ஆற்றிவரும் பணிகள் எண்ணிலடங்கா. சர்வதேச தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். பின்பு மன்னார் மாவட்டச் செயலகத்தில் காணிப் பயன்பாட்டு திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தராக ஐந்து வருடங்கள் பணியாற்றினார்.

அரச பணி என்பது இந்தச் சுதந்திரப் பறவையின் சிறகுகள் விரிய, விரிந்த ஆகாயமாக இல்லை என்ற ஆதங்கம். அரச பதவியை துறந்தார்.

பாரம்பரியத்தையும், ஆரண்யங்களையும் மருத நிலங்களையும் மன்னர்காலத்து மாண்மியங்களையும் வீரவரலாறுகளையும் என்று நம்மவர் வாழ்வியலின் கூறுகளை கண்டறிந்து வாழ்விக்கும் மங்கையாக தற்போது விளங்குகிறார். நமது தமிழ் கிராமங்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகிய ‚வணக்கம் தாய்நாடு‘ நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் ஐ.பி.சி.தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்.

தேசத்தின் மீதான அகல நெடுங் கோடுகளிடையே வண்ணமயமாகிக் கிடக்கும் மனித வாழ்வியலை, கலந்து காவியம் படைக்கவல்ல சர்மிலா வினோதினியின் புவியியல் அறிவும், காடுமேடுகளில் அலைந்துலவும் தைரியம்மிக்க கால்களும் நம் தேசத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் எங்களது சொத்தாக நிலைநிறுத்தும். நிலத்தையும் நீரையும் நம் வளத்தையும் பாடுமிந்தப் பூங்குயில் கற்ற சங்கீதமும், உளவியலும், புவியியலும், மானுடவியலும் வாழ்வியலும் இவரது படைப்புகளுக்கு வரமாகும். 
மிகுந்த பிரயத்தனங்களின் வெற்றியின் பயனாய் இவளிங்கு வளம் எனவாகி நிற்கிறாள்.

டிசம்பர் 2018 இல் சென்னை, நந்தனத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில், பூவரசி வெளியீடாக, இந்த ‚மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்‘ நூல் விஞ்ஞானி டில்லி பாபு அவர்களால் முதற்பிரதி வெளியிடப்பட எழுத்தாளர் தமிழ்நதி அவர்களால் பெறப்பட்டு வெளியீடு கண்டது.

அங்கு வெளியிடப்பட்ட நூலுக்கு இங்கே ஒரு விழா. ஆம் நூலுக்கு விழா. அறிமுக விழா, இந்த எழுத்து எம் வாழ்வின் பதிவு. ஆகவே, எம் வாழ்வைப் பேசுவதற்காக முன்னெடுக்கும் இந்த விழாவில், இந்த நூலில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தர்களைப் பேச, உரை நிகழ்த்துவோர் வந்திருக்கிறார்கள். காசு பணம் கடந்து நம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, மீண்டும் தலை நிமிர்த்த இந்த நாளையும் கொண்டாடுவோம்.

நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம். இனிய தங்கை சர்மிலா வினோதினி, பேரொளியை நிரப்பியபடி நடப்பவள். இவளது கலைகள், மூடிக்கிடக்கின்ற பல இதயக் கதவுகளைத் தட்டித் திறக்கட்டும்.
சர்மிலா வினோதினியின் மலரும் நினைவுகளில் பதிந்து கிடக்கும் வாழ்வின் தடங்கள், இம்மண்ணின் வாழ்வியல் தடங்களாக வலுப்பெற வாழ்த்தி அறிமுக உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி
வெற்றிச்செல்வி
16.07.2019