சிரிப்பதற்கு நேரமில்லை.-இந்துமகேஷ்

சிரிப்பதற்கு நேரமில்லை.-இந்துமகேஷ் ஒரு அலுவலகத்துக்குள் நுழைகிறோம். நமக்காகக் காரியம் பார்க்கவேண்டிய அலுவலர் கடுகடுப்பாக நிற்கிறார். முகத்தில் சாந்தம் என்பதே மருந்துக்கும் கிடையாது. “ சரி இன்றைக்கு வந்தவேலை அவ்வளவுதான்!“ என்று முடிவெடுத்துக் கொள்கிறோம். அன்றாடம் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது மனைவி சிடு சிடுத்துக்கொண்டு நிற்கிறாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.“ உன் புன்னகைக்காகத் தெருவில் தவம் கிடக்கிறேன்!“ என்று வாலிபத்தில் விளங்காத் தனமாய் எழுதித் தொலைத்தது நிரந்தரமாகிவிட்டது. புன்னகையைத் தெருவில்தான் தேட வேண்டியிருக்கிறது. மனம் சோர்ந்துபோகிறது.மகனோ மகளோ பாடசாலைவிட்டு வீட்டுக்கு வருகிறார்கள். விசை கொடுத்தால் இயங்கும் பொம்மையைப்போல் முகத்தை எந்தவிதமான உணர்ச்சியுமில்லாமல் வைத்துக்கொண்டு புத்தகப் பையை ஒருபுறம் கொண்டுபோய் எறிந்துவிட்டு முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு ஒரு பக்கமாகப்போய் உட்கார்ந்துகொள்கிறார்கள்.“ சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?“ என்று பாடிப் பாடி வளர்த்தது. புன்னகைக்க அதற்கு நேரமில்லை இப்போது.தெருவில் நடந்துகொண்டிருக்கிறோம், புதிய ஒரு முகம் தெரிகிறது. நடையுடை பாவனைகள் ஜெர்மன்காரர் மாதிரி என்றாலும் அங்க அடையாளங்கள் எங்கடை ஆள் என்று அடையாளம் காட்டுகிறது. அறிமுகத்துக்காய் ஒரு புன்னகையைச் சிந்தினால் அந்தாள் எங்களை முறைத்துப் பார்க்கிறது.“ சரி அறிமுகம் இல்லா ஆளுடன் நமக்கென்ன பேச்சு? “ என்று நடந்தால் நமது உற்ற நண்பர் ஒருவர் எதிரில் வருகிறார்.முன்பு நல்ல அன்னியோன்னியமாகப் பழகிய மனிதர்.. அடிக்கடி பகிடிவிட்டுச் சிரிப்பார். இப்போது கண்டும் காணாதது மாதிரிப் போகிறார்.என்ன சங்கதி?“ஒண்டுமில்லை இத்தனை நாளும் பார்த்துவந்த வேலையைவிடத் திறமான வேலையொண்டு இவருக்குக் கிடைச்சிருக்காம். உழைப்பு உழைப்பு எண்டு இருபத்தி நாலு மணி நேரத்தையும் அதிலையே கழித்துவிட வேண்டியிருக்காம். அதாலை ஆரோடையும் இப்ப அவர் கதைக்கிறதில்லையாம்!“உலகம் இப்போது ஒட்டுமொத்தமாய்த் துன்பத்தில் தோய்ந்து போய்க் கிடக்கிறது. வாழ்வோடு போராடும் மனிதன்! தன் வாழ்வின் தேவைகள் நிறைவுபெறும்போதுகூட அவனால் அமைதிபெற முடியவில்லை.எதிலும் திருப்தியின்மை. இன்னும் இன்னும் இன்னும் என்று ஏங்கும் மனம் இதில் மிகப்பெரும் வேதனை “ இவன் எல்லாம் கிடைக்கப் பெற்றவன்!“ என்று ஒருவனைப் பார்த்து நாம் நினைத்தால் அவனும்கூட நிம்மதியாக இல்லை என்பதுதான். எங்கள் ஊரில் ஒருவர்- ஊருக்குள்ளேயே மிகப்பெரும் பணக்காரர். ஊருக்குள்ளேயே பெரும்பகுதி நிலத்தை அவர் வாங்கிப் போட்டிருந்தார். பலபேருடைய காணி உறுதிகள் அவருடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும். என் சக மாணவன் ஒருவன் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு தடவை இவன் அவரிடம் ஏதோ உதவிக்காய்ப் போனபோது அவர் சிரித்தபடி சொன்னாராம்: “ எட தம்பி! எங்கடை ஊருக்குள்ளையே நீயும் நானும்தான் சரியான ஏழையள்!“ என்று.அந்த வயதில் கோபம் வந்தது. இப்போது சிரிப்பு வருகிறது. எவ்வளவுதான் வாழ்க்கை வசதிகள் இருந்தாலும் மனத்தால் வறுமைப் பட்டவன் எப்போதும் ஏழைதான்.பூவரசு சித்திரை (1995) இதழ் நகைச்சுவைச் சிறப்பிதழ் என்று திடீரென்று அறிவித்ததும் பல நண்பர்களுக்கு ஆச்சரியம்.“என்னாச்சுது உங்களுக்கு?“ என்று கேட்டார்கள்: „ஒன்றுமில்லை நாங்களெல்லாம் மனம்விட்டுச் சிரித்துக் கனகாலமாகிவிட்டது. அழுமூஞ்சிகளைப்போல் மனிதர்கள் தெருக்களில் போய்க்கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சரி நாங்களாவது சிரித்துக் கொண்டு போனால் எதிரில் வருபவர் முகத்திலாவது சிரிப்பு வராதா என்ற ஏக்கம்தான் !“ என்றேன்.“கடைசியில் நீங்கள்தான் தனியாக நின்று சிரிக்கப்போகிறீர்கள்!“ என்றார் ஒரு எழுத்தாள நண்பர்.“சரி.. நான்மட்டும் சிரிக்கவாவது ஏதாவது எழுதுங்களேன்!“ என்றேன். „சொந்தமாக எழுத மூட்டில்லை. வேண்டுமானால் நான் படித்துச் சுவைத்தவைகளில் இருந்து சில பகுதிகளை எடுத்து அனுப்புகிறேன்.“ என்றார் அவர். அவரைப்போலவே பலர் தாங்கள் சுவைத்தவைகளை அனுப்பியிருக்கிறார்கள்:மற்றவர்களைச் சிரிக்கவைப்பதென்பது இலகுவான காரியமல்ல. அது மிகப்பெரிய கலை. இந்தக் கலையில் மிகப்பெரும் மேதாவிகளாகத் திகழ்ந்தவர்கள் கலை இலக்கிய உலகில் அழியாப் புகழ்பெற்று இன்றும் நம்மிடையே உலவிக்கொண்டிருக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை நையாண்டி செய்து சரியான பாதையிலே சமுதாயத்தை இட்டுச்செல்ல நகைச்சுவைக் கலைஞர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.நகைச்சுவையாகச் சொல்லப்படும் கருத்துக்கள் இலகுவாக மனங்களில் ஒட்டிக்கொள்ளும் வலிமையைப் பெற்றிருக்கின்றன.ஈழத்துப் பத்திரிகை உலகில் சாதனை நிகழ்த்திவரும் சிரித்திரன் இதற்குச் சான்றாகும். என்றும் மனங்களில் உலவி வரும் சவாரித் தம்பரையும் மகுடியாரையும் யாரால்தான் மறக்கமுடியும்?“ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணலாம்!“ என்று அறிஞர் அண்ணா சொன்னாராம். இறைவனைக் காண்பதென்பது மிகக் கஷ்டமான காரியம். நிறையக் கஷ்டப்பட்டால்தான் அது சாத்தியம். சிரிப்பும் இறைவனைப்போலத்தான் என்றால் ஒருவரைச் சிரிக்க வைப்பதற்கும் மிகவும் கஷ்டப்படவேண்டும்.நீங்கள் கஷ்டமில்லாமல் சிரிக்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்தச் சிறப்பிதழை மிகவும் கஷ்டப்பட்டுத் தயாரித்திருக்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டுத்தான் சிரிக்க வேண்டுமென்றால் நாங்கள் கஷ்டப்படாமலே இந்தச் சிறப்பிதழைத் தயாரித்திருக்கலாம். வாழ்க்கையில் கஷ்டமில்லாமல் வாழத்தான் மனிதன் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறான். கஷ்டப்பட்டுச் சம்பாதித்தும் கஷ்டமில்லாமல் வாழமுடியாட்டில் இவன் கஷ்டப்படாமலே இருந்திருக்கலாம். கஷ்டப் படாட்டில் பிறகு ஒருநேரம் கஷ்டமில்லாமல் வாழ முடியாதுதானே? ஆனபடியால் கஷ்டப்படத்தான் வேணும்.கஷ்டப்பட்டாலும் கஷ்டப்படாட்டிலும் எப்பவும் சிரிச்சமுகத்தோடை இருக்கப் பழகினாத்தான் மற்றவர்களின்ரை கண்ணீரைத் துடைக்கிற நல்லமனசு எங்களுக்கு வரும்,“அழுதுகொண்டு பிறக்கிற மனிசன், தான் போறநேரம் தன்ரை சொந்த பந்தம் எண்டு கொஞ்சப் பேரையாவது அழ வச்சிட்டுத்தான் போறான்.உயிரோடை இருக்கிற காலத்திலையாவது தன்னாலை முடிஞ்சவரைக்கும் மற்றவையைச் சிரிக்கவைச்சுப் பார்க்கலாம்தானை?“- ஏதோ பெரிய தத்துவம் சொல்லிவிட்டதாய் எனக்கு நினைப்பு.உங்களுக்குத் தெரியாதா என்ன?ஹி….ஹி….ஹி…-இந்துமகேஷ்.