சிறுகதை.இல்லாள்-இந்துமகேஷ்“

இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய்வேண்டாள்…“பட்டினத்தார் சுவாமிகள் பாடிவைத்துவிட்டுப்போன பாட்டு அது.பாட்டு நீளம். அதில் நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டால் போதும்தானே!இப்போதைக்கு இந்த இரண்டுவரிகளும் போதும்.“வெளிநாடு எவ்வளவு முன்னேறியிருக்குது. உழைக்கத் தெரிஞ்சவங்களின்ரை கையிலை காசு கத்தை கத்தையாப் புரளுது. ஊரிலை ரெண்டு வீடு. ஒதுங்கின இடத்திலை ரெண்டு வீடு. பிள்ளைக்கொரு கார் (பெத்தது நாலெண்டால் நாலு கார் எண்ட கணக்கிலை)பாங்கிலை ஒண்டுக்குப் பின்னாலை ஆறு சைவருக்குக் குறையாமல் காசு.. வாழத் தெரிஞ்சவங்களுக்கு உழைக்கத் தெரிஞ்சிருக்குது. தொழில்நுட்பம் நிறைஞ்ச வெளிநாட்டுக்கு வந்தும் உருப்படாததுகள் எத்தினை இருக்குதுகள்- உங்களைப்போல!“-எப்போதும்போல் அதே கீறல்விழுந்த இசைத்தட்டாக இரையும் மனைவியின் மங்கள இராகம்.சின்னவயசில் சிவாஜிகணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தைப் பாடமாக்கி பள்ளித் தோழர்களிடம் ஒப்பவித்துவிட்டு, அவர்கள் வாய்பிளந்து இரசிப்பதைப் பார்த்து மகிழ்ந்துபோவார் இரகுபதி.இவர் வாலிபனானபோது இவரது நாடகங்களில் கதாநாயகனாக வலம்வரும் இவரது அழகைப்பார்த்து அதில் வசமாகி இவர் வீட்டுக்கு கனவுகளோடு குடித்தனம் வந்தவள்தான் மேனகா.ஆரம்பகாலச் சந்தோஷங்களில் காசுபணத்தைப் பற்றிய கவலைகள் பெரிதாகத் தெரியவில்லை.கையிலை ஒண்டு வயித்திலை ஒண்டு என்ற காலம்மாறி, கால்களைக் கட்டிக்கொள்ள மூன்று, இடுப்பில் இரண்டு, வயிற்றில் ஒன்று என்று காதல்கணக்கின் கூட்டல் அதிகரித்தபோதுதான் காதல் மனையாளின் வாயிலிருந்து கசப்பான வார்த்தைகளும் உதிரத்தொடங்கின.“யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக கேட்கிறாய் வட்டி..?“ என்று இவர் கட்டபொம்மனாய் மாறி மனைவியைக் கேள்விகேட்க முடியாது.“எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர்பாய்ச்சி நெடுவயல் கண்டாயா?“ என்றும் கேட்கமுடியாது. இவருக்கு அந்த வேலைகளும் தெரியாது.தெரிந்தது எல்லாம் ஒன்றுதான்.கலை கலை கலைதான்!இவருக்கு முன்னால் „தோன்றிற் புகழோடு“ தோன்றிய கலைஞர்களெல்லாம் „கலை காசுபோடாது… கலை காசுபோடாது!“ என்று எத்தனை தரம் சொல்லி அழுதிருப்பார்கள்.கடைசிநேரத்தில் தியாகராஜபாகவதர் முதல் சிவாஜிகணேசன் ஈறாக „என்னோட குடும்பத்துக்கு நா ஒண்ணும் தேடிவைக்கல!“ என்று கவலைப் பட்டுக்கொண்டுதான் கண்ணை மூடிக்கொண்டார்கள்.அப்பேர்ப்பட்ட மகா கலைஞர்களின் கதியே இப்படி என்றால்… இவர் தரவழிக்கெல்லாம்…?எவ்வளவுதான் மேனகா தொண்டைத்தண்ணி வற்றக் கத்தினாலும் குத்தி முறிந்தாலும் இரகுபதியரின் காதுகளில் அவை விழுந்ததாகத் தெரியவில்லை.ஒருவேளை அது அவருக்கு மனப்பாடம் ஆகிவிட்டதால் அதுகளைக் காதில் போடத் தேவையில்லை என்று அவர் கருதிக் கொண்டாரோ என்னமோ!மனைவி மக்களை எப்படியோ பத்திரமாக வெளிநாட்டுக்கு அழைத்து வந்துவிட்டிருந்தார் அவர்.இங்கேதான் அவருக்கு நாளாந்த அர்ச்சனை நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை.வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் மேடைகளிலும் என்று இவர் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.“பிழைக்கத் தெரியாத மனிசன்!“ என்று „பிழைக்கத் தெரிந்தவர்கள்“ இவரது முதுகுக்குப் பின்னால் வார்த்தைச் சவுக்கெடுத்து அடித்தாலும் இந்த மனிதருக்கு உறைப்பதில்லை.மனைவி மேனகா சொல்வதுபோல்-„என்ன ஜென்மமோ!“ஒரு சனிக்கிழமை மாலைப்பொழுது.நாளை நடக்கவிருக்கும் ஒரு நாடக விழாவுக்கான ஒழுங்குகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார் அவர்.சமையலறையில் மனைவியின் அர்ச்சனைக்கான நேரமும் ஆரம்பித்திருந்தது.அப்போதுதான் தமிழாலயத்துக்குப் போய்விட்டு வந்திருந்த கடைக்குட்டிகள் இரண்டும் அடுத்த அறையிலிருந்து எதற்காகவோ தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சின்னவள் திவ்யா அப்பாவை உதவிக்கு அழைத்தாள்.“அப்பா.. ஒருக்கால் இங்கை வந்திட்டுப் போங்கோ!““என்ன?““மனைவி எண்ட சொல்லுக்கு ஒத்த சொல்லு மூண்டு எழுதவேணும்… மனையாள், துணைவி, இல்லாள் எண்டு எழுதியிருக்கிறன்..இதிலை இல்லாள் எண்டு ஏன் சொல்லுறது?““எனக்குத் தெரியும் எண்டு சொன்னன்.. இவள் கேட்கிறாளில்லை!“ என்றான் சின்னவன்.“என்ன.. சொல்லு!““எப்ப பார்த்தாலும் வீட்டிலை ஒண்டும் இல்லை ஒண்டும் இல்லை எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறதாலைதான் இல்லாள். சரிதானை டாட்?“இரகுபதிக்கு எங்கோ இடித்தது.“இல்லாள் எண்டு எல்லா மனிசிமாரையும் சொல்லலாம். ஆனால் இல்லை எண்டுசொல்லுறது உன்ரை அம்மா மட்டும்தானை?!““இல்லை அப்பா.. கீாத்திகாவின்ரை அம்மாவும் இப்பிடித்தான்…எங்கடை அம்மா மாதிரித்தான். அவவின்ரை அங்கிளை எப்பவும் திட்டிக் கொண்டிருப்பா. அதில்லை இதில்லை எண்டு. ஆனா பாவம் அப்பா அந்த அங்கிள். மூண்டு நேரவேலை. எப்பவும் உழைப்பு உழைப்பு எண்டு ஓடித் திரியிறவர். அதிகமாய் வீட்டிலையே இருக்க மாட்டேர்.““இது ஆர் உனக்குச் சொன்னது?““கீர்த்திகாதான்.. பாவம் அப்பா எண்டு சொல்லுவாள்!““அப்பா! இல்லாள் எண்டதுக்கு நான் சொன்னது சரிதானை?“ என்றான் சின்னவன்.“இல் எண்டால் வீடு. ஆள் எண்டால் ஆள்பவள் எண்டு அர்த்தம்! இல்லாள் எண்டால் வீட்டை ஆள்பவள் எண்டு அர்த்தம்“ என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்தார் இரகுபதி.“ம்.. உழைப்புக்கு வெளிக்கிட்டிட்டேர்..!“ என்று கிண்டல் பண்ணிக்கொண்டே அவரருகில் வந்தாள் மேனகா.கதவைத் திறந்தார் இரகுபதி.வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது.“நில்லுங்கோ நில்லுங்கோ! என்று அவரைத் தடுத்தபடி உள்ளே ஓடிப்போய் குடையை எடுத்து வந்து அவரது கையில் கொடுத்துவிட்டு மேனகா சொன்னாள்:“குடையைக் கொண்டு போங்கோ! மழைக்குள்ளை நனைஞ்சு வருத்தத்தைத் தேடிக் கொள்ளாதேங்கோ!“அவர் ஒரு புன்னகையுடன் மனைவியைப் பார்த்தபடி குடையை விரித்தார். தெருவில் இறங்கினார்.கதவைச் சாத்தியபடியே மேனகா முணுமுணுக்கத் தொடங்கினாள்:“எப்பதான் இந்த மனிசனுக்குப் புத்திவருமோ.. எப்பதான் இந்த மனிசன் உருப்படுமோ..?!“000