சிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் அவர்களுக்கு ஏழாலையில் சிலை திறப்பு

ஏழாலை முத்தமிழ் மன்ற ஸ்தாபகரும், திருவாசகம், திருமுறை ஓதுதலில் சிறந்து விளங்கியவருமான சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(27.01.2019) பிற்பகல் ஏழாலை முத்தமிழ் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
.
ஏழாலை முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத் தலைவர் நா.இலட்சுமிகாந்தன் தலைமையில் விழா நடைபெற்றது.
.
ஏழாலை முத்தமிழ் மன்றத்துக்கு அருகாமையில் வீதியோரமாக அமைக்கப்பட்டுள்ள சண்முகவடிவேலின் திருவுருவச் சிலையை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன்,தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும்,சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்,நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஓய்வுநிலை அதிபரும்,சைவப்புலவருமான கலாபூஷணம் சு. செல்லத்துரை,உடுவில் பிரதேச செயலாளர் சி. ஜெயகாந், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் சிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் குறித்து உரைகளை ஆற்றினர்.
.
யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவன் நிரோஜனின் தமிழிசைக் கச்சேரி – இன்றைய சூழலில் ஆலயங்களின் பெருக்கம் ஆரோக்கியமானதா? ஆரோக்கியமற்றதா? என்ற தலைப்பில் அமைந்த பட்டிமண்டபம் என்பன இடம்பெற்றன.
.
பட்டிமண்டபத்திற்கு நான் நடுவராகச் செயற்பட்டேன். மாவை. எம்.வி.லிங்கம், செ.கணேந்திரன், எஸ்ரி. அருள்குமரன், சி.செந்தூரன், த.ராகவன், அ.ரவிவர்மன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர்.