சிவமும் சீவியமும் -இந்துமகேஷ்

இன்னும்தான் விடை கிடைக்கவில்லை!
உலகெங்கிலும் ஆலயங்களை அமைத்தாயிற்று. பக்திமிகுந்த உள்ளத்தோடு இறைவனுக்குப் பணிவிடைகள செய்து அவனது பாதாரவிந்தங்களைப் பணிந்தாயிற்று. ஆயினும் வேண்டிய வரங்கள் கிட்டவில்லை. வேதனைகள் தீரவில்லை. ஒன்றுமாறி ஒன்றாய்த் தொடரும் துன்பங்கள்….!
இவற்றிலிருந்து விடுபட வேறு மார்க்கமே இல்லையா எனத் தவிக்கும் மனங்கள்.

„கடவுள் என்று எதுவுமே இல்லை! கடவுள் கடவுள் என்று வெறும் கற்பனையில் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களால் எந்தப் பயனும் இல்லை!“
– கடவுள் மறுப்பாளர்களுக்கு இப்போது காரணங்கள் பிடிபட்டுவிட்டனவாம்.
முட்டாள்தனங்களும் மூடநம்பிக்கைகளும் ஆன்மீகவாதிகளை ஆட்கொண்டிருக்கும் உண்மையை உணரும்வரை இவர்கள் உருப்படப் போவதில்லை! என்று பரிகாசக் குரல்கள் எழுகின்றன.

படைத்தவனே பாராமுகமாய் இருக்கும்போது வாழ்க்கைத் துயரங்களிலிருந்து விடுபட வேறு வழிதான் ஏது?

இறைவனை நம்பியவாகள் இதயங்களில் சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தாயிற்று.
„உண்மையில் கடவுள் என்று எதுவுமே இல்லையோ?“

உலகம் உள்ளவரை வாழ்க்கை உள்ளவரை இந்தத் துன்ப துயரங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும் எனத் தெரிந்தாலும் தொடர்ந்தும் இறைவனைத் தேடி ஓடும் மனது.
ஒருநாளாவது கடவுள் நம்மைக் கண்திறந்து பார்க்கமாட்டாரா என்ற வினா எல்லோரது விழிகளிலும்!

„இறைவழிபாடு எதற்காக?“
„இதுகூடத் தெரியாதா என்ன? இந்த உலகத்தில் பிறந்த நாங்கள் நல்வாழ்க்கை வாழத்தான்!“
“நல்வாழ்க்கை என்றால்?”
“வசதியாக சந்தோசமாக வாழ்தல்!”
“விரும்பிய யாவையும் பெற்று வாழ்தல்!”
“நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்தல்.!”

இந்த உலகத்தோடு ஒட்டிய வாழ்வுக்கான வரம்பெறவே இறைவழிபாடு என்பதாகவே எல்லோரும் உணர்கிறோம்.
நோன்புகள்;, நேர்த்திக்கடன்கள், வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் எல்லாமே இந்த வாழ்வோடிணைந்த தேவைகளுக்காகவே என்று கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால் உண்மையில் இந்த வழிபாடு என்பது நமது கன்மவினைகளை வேரறுத்து ஆன்மீக விடுதலை பெறுவதற்கானது என்ற உண்மையை எவரும் உணர்ந்ததாக இல்லை.

உலகவாழ்க்கை நிரந்தரமற்றது என்ற உண்மையை உணர்ந்திருந்தாலும் எப்போதும் அந்த உணர்வைச சுமந்துகொண்டு வாழ்தல் என்பது சாத்தியமற்றது.
வாழ்க்கைக்குரிய கடமைகளை முழுமையாகச் செய்யமுடியாமல் அது மனிதர்களை முடக்கிவிடவும் கூடும். பற்றறுத்த பரதேசிகளின் கூடாரமாய் இந்த உலகம் மாறிவிடுவதைப் பரம்பொருளே விரும்பமாட்டான். உலகத்தைப்படைத்து உயிர்களைப்படைத்த இறைவன் அந்த உயிர்களின் வாழ்வக்கான அர்த்தம்குறித்து அக்கறை கொள்ளாதிருக்கமாட்டான்.

எல்லாப் பிறப்புக்களிலும் உயர்பிறப்பான மானிடப்பிறப்பு அவரவரது கன்ம வினைகளுக்கேற்பவே இன்பதுன்பங்களை அனுபவத்து இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான மார்க்கத்தைக் கொண்டிருக்கிறது.

இன்று நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் என்றோ எமக்காக விதிக்கப்பட்டவை.
கால ஒழுங்கில் அவை நம்மைக் கடந்துபோகின்றன. இன்றைய நமது வினைகள் எதிர்காலத்தில் அதற்கான பலன்களை நம்மிடம் எடுத்துவரப்போகின்றன. இதுவே நமது பிறப்பும் இறப்புமாய் நம்மைத் தொடர்கிறது. இவற்றிலிருந்து விடுதலைபெற்று நாம் இறைவனைச் சென்றடைவதற்கான வழியைக் கண்டடைவதே நமது தேவையும் சேவையுமாக இருக்கட்டும்!

சாதல் பிறப்பென்னும் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொரு கூறுடைய பிரான் தன்கழலே சேரும் வண்ணம்
ஆதிஎனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே!

(மாணிக்கவாசகர் திருவாசகம் – அச்சோப்பத்து-8)