திரு வைரமுத்து திவ்வியராஜன் தயாரித்து வெளியிட்டுள்ள ‚நயனம்‘ என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா

கனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகவும் தாயகத்தில் அதற்கு முன்னர் பலவருடங்களாகவும் இசை, நாடகம் எழுத்து , தமிழ்க் கல்வி, கவிதை சினிமா போன்ற பன்முக ஆளுமைகளோடு இயங்கிவரும் திரு வைரமுத்து திவ்வியராஜன் தயாரித்து வெளியிட்டுள்ள ‚நயனம்‘ என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமையன்று பிற்பகல் ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆசிரியை கோதை அமுதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம்பெற்றன.

திரு வைரமுத்து திவ்வியராஜன் அவர்களது துணைவியாரும் நடன ஆசிரியையுமான திருமதி சிவா திவ்வியராஜன் மற்றும் அவர்களது பிள்ளைகள் இருவரினதும் பங்களிப்புகளும் இந்த இறுவெட்டு தயாரிப்பில் அடங்கியிருந்தன என்பதும் மேற்படி விழாவிலும் அவர்கள் குடும்பமாக வந்து அனைத்து ஏற்பாடுகளைக் கவனித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திருவாளர்கள் டாக்டர் போல் ஜோசப், சின்னையா சிவனேசன், எழுத்தாளர் க. நவம் ஆகியோரும் அங்கு உரையாற்றினர். பல கலைஞர்கள் மேடையில் கௌரவிக்கப்பெற்றனர்.
அத்துடன் இறுவெட்டின் பிரதிகளையும் அழைக்கப்பெற்ற பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.