தொலைவில்!கவிதை சுபாரஞ்சன்

பாதங்களை
எடுத்து வைக்கும் போது
பாலைவனமாக இருந்தாலும்
மனம் பேதலிக்கா
மந்திரமாய் ஒரு சோலைவனத்தை
உச்சரித்துக்கொண்டே நடக்க

கண்முன்னே கனிகள் தோன்றும்
காதினிலே காற்று நுழையும்
நாசிகளில் நறுமணம் வீசும்
ஆதிக்கனி ஒன்றை சுவைக்கத் தோன்றும்…….

நெக்குருகி
அழுவதை நெஞ்சம் மறக்கும்
நோய்கூட நொடியில் பறக்கும்
இயற்கையின் தாளகதி உள்நுழைந்து
மெல்லிசையை மீட்ட
பாடத் தோன்றும்

காணமுடியாத ஒன்றை
தேடிக்கொண்டே நடக்க
இருப்பதாகவே உணர்த்தும்
எப்போதாவது
எக்கணத்திலாவது
கிடைத்துவிடும் எனத் தோன்றும்

 

 

ஆக்கம்  சுபாரஞ்சன்