நம்மவர்களை நாம் அறிவோம் இசைக் குயில்  சந்தானலட்சுமி தம்பிராஜா!

கட்டைபறிச்சானின் அண்ணாவியார் மரபில் வந்த இசைக்குயில் சந்தானலட்சுமி.அண்ணாவியார் இ.நல்லதம்பி அவர்களின் இசை வாரிசு.இசையே மூச்சாய் வாழ்ந்தவர் அண்ணாவியார் நல்லதம்பி அவர்கள் .கருவிலே திருவுடையார் என்ற முது மொழிக்கேற்ப இயற்கையாகவே சங்கீத ஞானம் மிக்க வராக தன் திறனை பாடசாலைப் பருவம் முதல் தன் குரலால் வசீகரித்தவர் சந்தானலட்சுமி.

பாடசாலை நாட்களில் சேனையூர் மத்திய கல்லூரி மாணவர் மன்றம் அவர் பாடல்களால் ஒவ்வொரு முறையும் ஆர்ப்பரித்து நிற்கும்.பாட்சாலையில் நிகழும் வாணி விழாக்கள் கலை விழாக்கள் சந்தானலட்சுமியின் இசை இல்லாமல் நிறைவு பெறாது.

பாடகி சுசிலாவின் குரலை ஞாபகப் படுத்தினாலும், அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு தனித்துவ முத்திரை பதித்தது இவர் குரல். பல சந்தற்பங்களில் எம் எஸ்சை நினைவு படுத்திச் செல்லும் குரலாகவும் விரிவதுண்டு.

இலங்கையின் புகழ் பெற்ற சங்கீத வித்துவான் சங்கீத பூசணம் திருமிகு.வர்ணகுலசிங்கம் அவர்களிடம் சில காலம் முறைப்படி சங்கீதம் கற்றவர்.சில வருடங்கள் இராமநாதன் அகடமியிலும் இசை பயின்று தன் திறனை வளர்த்து கொண்டவர்.

கட்டைபறிச்சான் கலை வாணி இசைக் கழகத்தின் புகழ் பெற்ற பாடகியாக திருகோணமலை மாவட்டம் முழுவதும் அறியப் பட்டவர்.மூதூர் பகுதியில் நடை பெறும் விழாக்களில் சந்தானலட்சுமி பாடுகிறார் என்றால் அவர் இசையைக் கேட்பதற்காகவே பெரும் கூட்டம் கூடும்.

ஆசிரியையாக பணி புரிந்து இன்று ஓய்வு நில ஆசிரியராக தன் குரலால் சாதனைகள் பல நிகழ்த்தியிருந்தாலும் அது பற்றியதான தற் பெருமை கொள்ளாத அமைதியும் அடக்கமும் நிறைந்த இவர்களை போன்றவர்களை தேடிக் கண்டு பிடித்து விருது வழங்கி மதிப்பளிக்க வேண்டிய கடமை கிழக்கு மாகாண கலாசாரத் திணக்களத்திற்கும், இலங்கை அரச கலாசார அமைச்சுக்கும் உண்டு.

வாழ்த்துவோம் மதிப்பளிப்போம் இத்தகைய கலைஞர்களை.