நாடு விட்டு நாடு வந்து

நாடு விட்டு நாடு வந்து
நாய்ப் பிழைப்பா போகிறனே
வீடு விட்டு நானும் வந்து
வீதியிலே தூங்குறனே
பாடுபட்டு பணமுைழச்சி
பக்குவமாய் கரை சேர
கூடு விட்டு ஓடி வந்தேன்
குஞ்சிக்கிரை தேடி வந்தேன்.
காடுவெட்டி கழனி சேர்த்து
காசு பணம் சேர்த்திடலாம்.
மாடு கன்று வளர்த்தெடுத்து
மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம்
ஏடு தொட்டு படிச்சிருந்தா
எங்கேயோ போயிடலாம்
தேடி வச்ச சொத்திருந்தா
தேவையின்றி மகிழ்ந்திடலாம்.
ஓடுகின்ற நீராட்டம்
ஓய்வின்றி உழைக்கிறனே i
மேடு பள்ள வாழ்க்கையிலே
மேனி நொந்து இளைக்கிறனே!
ஆடுகின்ற பம்பரமாய்
அலைந்து இரை தேடுறேனே!
வாடுகின்ற பயிரைப் போல
வலி சுமந்து காய்கிறேனே!

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்