நானும் நீயும்…

கண்ணோடு கண் நோக்கினாய்
கேள்வியோடு உனை நோக்கினேன்
கள்ளச்சிரிப்போடு மெல்ல சொன்னாய்
உன் புன்னகைப் பிடிக்குமென்று..
பூக்களைத்தழுவிய காற்றாக உன்
பொன்வார்த்தைகளுக்குள் மறைந்த
பாசத்தை எங்கேதான் ஒளித்தாய்
நயவஞ்சகன்தானே நீ என்றேன்..
நமட்டுச்சிரிப்போடு நறுமணம்வீசும்
நெட்டியோடு பறித்த செவ்வந்தியை
சுட்டிய உன் விழிகளில் என் முகம் கண்டு
சொக்கித்தான் ஒரு கணம் நின்றேன்.
சுட்டெரிக்கும் பகலவனும் குளிர்ந்தான்
காய்ந்துபோன புல்வெளியும் அரும்பியது
கருக்கொண்ட மேகம் பொழிந்தது
குதித்தாடியது காதலில் மூழ்கிய உள்ளம்..
மகிழம்பூவை எடுத்துச்சூடிக்கொண்டது
மெட்டியோசை ஒலியிசையில்
தம்மொழி மறந்தன பறவைகள்
தேயாத நிலாவான நம்காதலை ரசித்து
உனக்குள் நீ சிரித்துக்கொண்டாய்..

ரதிமோகன்