நான் சொல்ல வந்ததும் சொல்லாமல் வந்ததும்! -இந்துமகேஷ்

வெற்றி நிலா முற்றம் 2017
விருதும் விருந்தும்

கடந்த மாதம் (ஆவணி 2017) வெற்றிமணி தனது 250வது இதழை வெளியிட்டிருந்தது. ஆரவாரம் எதுவுமின்றி
அது வெளிவந்தபோதும் அதுகுறித்து வெற்றிமணியின் படைப்பாளர்களும் வாசகர்களும் பேரானந்தம்
கொள்ளத் தவறவில்லை.

பல்கலைச் செல்வர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் (கண்ணா) அவர்களது கடின உழைப்பையும் விடாமுயற்சியையும்
வெளிப்படுத்திய வெற்றிமணியின் வளர்ச்சி குறித்து படைப்பாளர்கள் வாசகர்கள் என்று எங்கள்
எல்லோருக்குமே புளுகம்தான்.

„இந்த ஆண்டு வெற்றிமணி விழா விருதும் விருந்துமாக நிகழவிருக்கிறது கட்டாயம் வந்து கலந்துகொள்ளவேண்டும்!“
என்று அன்புக்கட்டளை பிறந்தது கண்ணாவிடமிருந்து. வழக்கம்போல் வெற்றிமணி படைப்பாளர்கள் கலைஞர்கள்
வாசகர்கள் என்று பலருக்கும் விருந்தளிப்பதோடு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கவிருக்கிறது! வெற்றிமணியின் மூத்த
படைப்பாளி என்றவகையில் இந்த வைபவத்தில் கலந்துகொள்ளவேண்டும்!“ என்றார் அவர்.

„வெற்றிமணி ஸ்தாபகர் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக மதுரகவி வி. கந்தவனம் அவர்களின் கரங்களால்
இலக்கியச் செம்மல் விருதும் அதற்குப்பின்னால் சில வருடங்களில் சிவத்தமிழ் விருதும் எனக்குக் கிடைத்திருக்கிறதே
இனி என்ன விருது தரப்போகிறீர்கள்?“ என்றேன்.
„விருது வழங்கும் நிகழ்வுதான். ஆனால் உங்களுக்கல்ல. இப்போது எழுதிக்கொண்டிருக்கும் மூத்த – இளைய
படைப்பாளர்களுக்குத்தான் விருதுகள்!“ என்றார் அவர்.

„சரி விருதுதான் இல்லை. விருந்தாவது கிடைக்குமா?“
„விருதும் விருந்தும்தானே விழா!“ என்றார் அவர்.

இம்முறை விழா நேரத்துக்கு சற்று முன்னதாகவே சமூகமளித்திருந்தேன்.
கண்ணாவும் அகரம் ஆசிரியர் இரவீந்திரன் அவர்களும் நிகழ்ச்சி ஒழுங்குகளில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தார்கள்.

அடுத்த ஓரிரு மணித்தியாலங்களில் விழா ஆரம்பமாயிற்று.
வரவேற்புரைக்கு வந்த கண்ணா, „இன்றைய விழாவின் பிரதம விருந்தினராக வெற்றிமணியின் மூத்த படைப்பாளர் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களை வரவேற்கிறேன்!“ என்றார்.
இது நான் எதிர்பார்க்காத ஒன்று.

இவ்விழாவில் விருது வழங்கும் நிகழ்வுக்கு அதிகநேரம் தேவைப்படுவதால் வாழ்த்துரை வழங்குபவர்கள் தமது
உரைகளை 5 நிமிடத்துக்குள் நிகழ்த்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் அறிவித்தார் அவர்.
அந்த நேரக்கட்டுப்பாட்டை அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமையாற்றிய இரவீந்திரன் முறையாகக் கடைப்பிடித்தார்.

„ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கம் சொல்லவே 5 நிமிடம் தேவைப்படுமே. அதனால் தனித்தனியாக வணக்கம் சொல்லமாட்டேன்!“ என்று எழுத்தாளரும் பேச்சாளருமான திரு. புத்திசிகாமணியும், „அறிவிப்பாளர் என்னை அறிமுகம் செய்ய 3 நிமிடம் எடுத்துக்கொண்டுவிட்டதால் அந்த 3நிமிடத்தையும நான் மேலதிகமாக எடுத்துக்கொள்கிறேன்!“ என்று எழுத்தாளர் சபேசனும் வேடிக்கையாகக் குறிப்பிட்டாலும் வாழ்த்துரை
வழங்கிய ஏலையா ஆசிரியர் முருகதாசன், தமிழருவி ஆசிரியர் நயினை விஜயன், மண் ஆசிரியர் சிவராஜா, எழுத்தாளர்கள் ஸ்ரீஜீவகன், புத்திசிகாமணி, சபேசன், கவிதாயினிகள் நகுலா சிவநாதன் கௌசி சிவபாலன் ஆகியோர் உட்பட அனைவரும் நேரக்கட்டுப்பாட்டுக்கமையவே தங்கள் வாழ்த்துரைகளை சிறப்புறவே வழங்கியிருந்தார்கள்

„எனக்கான நேரம் எப்போது?“ என்றேன்
„குறிப்பிட்ட நேரத்துக்கு நான் இரயில் நிலையம் திரும்பவேண்டும்.!“

„எல்லோருக்கும் விருது வழங்கியபின் உங்களுக்கான நேரம்!“ என்றார் இரவி.
சொன்னதுபோலவே கலைநிகழ்ச்சிகளும் விருதுவழங்கும் நிகழ்வும் நிறைவுக்கு வந்தபின்னர். விருதுபெற்றவர்கள் முன்னிலையில் ஒலிவாங்கியை என்னிடம் தந்தார் இரவி.
„இப்போது நீங்கள் பேசலாம்!“
„ஐந்து நிமிடம்தானே?“
„இல்லை நீங்கள் விரும்பியபடி எவ்வளவுநேரமானாலும்!“

முழுமையாகப் பேசுவதானால் ஆகக்குறைந்தது ஒருமணி நேரமாவது தேவைப்படும். அதுவரை எனக்கான இரயிலும்
விழாவுக்கு வருகைதந்தவர்களும் காத்திருக்கப் போவதில்லை என்று புரிந்தது. .
5 நிமிடத்திலேயே முடித்துவிடலாம என்று எண்ணிக்கொண்டேன்.

1950 களில் தாயகத்தில் தளிர்விட்ட வெற்றிமணி மீண்டும் 1990களில் ஜெர்மனியில் பதியமிடப்பட்டு இன்று வளர்ந்து உலகெங்கும் கிளைபரப்பி தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களில் இடம்பிடித்து தொடர்ந்தும் உற்சாகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
„வெற்றிமணியா அது என்ன விளம்பரப் பத்திரிகைதானே!“ என்று ஆரம்ப காலங்களில் அதனைச் சாதாரணமாக எடைபோட்டவர்களின் நினைப்புக்களை வேரறுத்து தமிழ்வாழும் இல்லமெல்லாம் தன் பணியை இளமையாக கவர்ச்சியாக புதுமையாகத் தொடரும் வெற்றிமணி…
தமிழ்க் கலைஇலக்கியத்துக்கு அளப்பரிய தொண்டாற்றிவருகிறது…படைப்பாளிகளுக்குக் களம் அமைப்பதோடு பல்வகை நூல்களையும்
இசைவடிவங்களையும வெளியிட்டு சாதனை புரிந்து வருகிறது.
வாழும்போதே வாழ்த்தப் பழகுவோம் என்று அனைத்துக் கலைஞர்களையும் வரவழைத்து அரவணைத்து ஆண்டுதோறும விருதளித்து கௌரவிக்கும் அதன் மகத்தான பணி போற்றுதற்குரியது.

தந்தையின் பணியைத் தொடரும் கண்ணாவும் அவரது கலை இலக்கிய சமூகப் பணிகளின் தொடர்ச்சியாய் எதிர்காலத்தின்
நட்சத்திரங்களாய்த் திகழும் அவரது மகன் சஞ்சயும் மகள் சிவஜெனனியும் தமிழ்க்கலை இலக்கிய உலகின் வெற்றிமணிகளே!
கலை இலக்கிய ஆர்வலர்களின் வாழ்த்தும் வரவேற்பும் என்றும் அவர்களுக்கு நிலையானது.!“

– இப்படித்தான் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னும் நான் சொல்லவந்ததில் அதிகமானவற்றை நண்பர் முருகதாசன் அவர்கள் உட்பட பல வாழ்த்துரையாளர்கள் சொல்லிவிட்டதால் மீளவும் நான் சொல்வது அழகல்ல என்று தவிர்த்துவிட்டேன்.

பொன்னாடைக் கலாச்சாரம்பற்றி கண்ணா என்ன நினைத்துக்கொண்டாரோ அதைத் தவிர்த்துவிட அவர் நினத்திருந்தார் போலும்.
ஆனால் கால காலமாக நம் பண்பாட்டு வழக்கில் வரும் பொன்னாடைக் கலாச்சாரத்தை புறந்தள்ளுதல் அழகல்ல என்று எனக்குத் தோன்றிற்று.
ஒருசில இடங்களில் அவசியமற்ற தோள்களுக்கு பொன்னாடைகள் போய்விடுகின்றன என்பதற்காக அவை புறக்கணிக்கப்பட வேண்டியன அல்ல.
வாழ்த்தப்படவேண்டியவர்களை வாழ்த்தும் நெஞ்சமும் வாழ்த்தப்படவேண்டியதுதான்.
அதை வாழ்த்துவதற்காகவே கண்ணாவுக்கு படைப்பாளர்கள் சார்பில் நானும் வெற்றிமணியின் வாசகர்கள் சார்பில் செல்வக்குமாரும் அவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.
தமிழ்க் கலை உலகுக்கு வெற்றிமணியின் சேவையும் தேவையும் அதிகம் உண்டு என்பதை அவருக்குத் தெரியப்படுத்தவே அந்தப் பொன்னாடை.

முக்கிய குறிப்பு:
விருதும் விருந்தும் நிகழ்வில் வெற்றிமணியின் இளைய படைப்பாளர்கள் என்று சில புதுமுகங்களைக கண்டேன்.
45 அண்டுகளுக்கு முன்பிருந்த நானும் கண்ணாவும் போல் அவர்கள தெரிந்தார்கள். வெற்றிமணியை எழுத்துக்களால் அலங்கரிக்க
அவர்கள் இருக்கிறார்கள். வெற்றிமணியின் 100வது ஆண்டுமலரில் அவர்கள் எனது இந்தக் கட்டுரையை மீள்பதிப்புச் செய்வார்கள்
என்று நம்புகிறேன்.