நினைவலைகள் !கவிதை கவிஞர் மணியம்.

 

மழைவெள்ளம் வந்து முற்றத்தில் நிற்க – அதில்
மண்டூபங்கள் சேர்ந்து மத்தளம் கொட்ட
ஈசல்கள் பறந்து விளக்கை மொய்க்க – அதன்
இறக்கைகள் எங்கும் பரந்துகிடக்கும்

சேவல்கள் கூவித் துயில் போக்க
தேன்மலர்கள் மொட்டவிழ்க்க
காலைவேளை கதிரொளி பரப்பும்
கதிரவன் உதயம் கண்டு மகிழ்ந்தோம்

காற்றும் மழையும் உடலைத் வருட
களிப்புடனே நாம் தலையைத் தடவ
உடலின் சூட்டில் உடுப்புகள்; காய
உள்ளமெல்லாம் உவகையில் துள்ளும்

சோழகக் காற்று மண் அள்ளி வீச
சுருட்டி முகத்தை மறுபக்கம் சாய்க்க
இரவும் நிலவும் எம்மைத் தழுவ
இன்பம் பொங்க மணலில் படுத்தோம்.

நண்பன் தெங்கில் இழனிகள் பிடுங்கி
அவனும் நாமும் குடித்து மகிழ்ந்தோம்
செய்த குறும்புகள் பல பல கூறி
சிரித்து மகிழ்து சேர்ந்து நடந்தோம்

கால்கள் சோர நடந்து திரிந்து
களிப்புடனே கடலில் நீந்;தி
நாளும் பொழுதும் சேர்ந்து திரிந்து
நட்பு மழையில் நனைந்து குளிர்ந்தோம்.

புத்தன் பெயரில் சாத்தான் புகவே
சொத்துக்கள் சுகங்கள் அனைதையும் விட்டு
காற்றினில் மிதந்து கடலைத் தாண்டி – எம்
தேசத்தை விட்டு எங்கேயோ வந்தோம்.

வளமான தேசம் அழகான நாடு
அகதியாhய் எம்மை அணைத்தது தன்னுள்
புரியாத மொழியும் பழகாத உணவும்
கட்டாய வாழ்வாய் கவர்ந்தது எம்மை.

சூரிய உதயம் காண்பதும் இல்லை
சுணைகளில் எங்கும் குளித்ததுமில்லை
நிலவையும் வானையும் பார்த்தபடியே
நின்மதியாய் படுக்க மண்மேடுமில்லை

மின் வெக்கையில் உதடுகள் வறள
உடல் மட்டும் கட்டையாhய் கிடக்க
பழசை நினைத்து நித்திரை இழக்க
உள்ளம் மட்டும் வெளியே திரியும்

குளிரும் பனியும் உடலை வாட்ட
கூனிக்குறுகிப் போர்வையில் புகுந்து
கடந்தகால நினைவலை நடுவே
கவலையுடன் புலர்கிறது பொழுது.

ஊர் நினைவில் உள்ளம் குமுறி
உதைத்த நினைவால் சொற்கள் சிந்தி
கடந்த கால நினைவுகள் வந்து
கவிதை எழுதத் தூண்டுது இங்கே.

மணியம்.