நிமிர்வு…கவிதை கவிஞர்தயாநிதி

வழி மீது
விழி நீள
வரனின்
வரவுக்காய்
வாசலில்
தவமிருப்பு…

வருவார்கள்
பாடென்பர்
ஆடென்பர்
ஆளுக்கொரு
கேள்விகள்
தொடுப்பார்கள்

படிப்பென்ன
பட்டமென்ன
வருமானமென்ன
காதல் கருமாதி
ஏதும் இருக்கோ
என அடுக்குவார்கள்

வகை வகையாக
வாங்கி வைத்த
பலகாரத் தட்டு
காலியாகும் போது
வரதட்சணை
எவ்வளவென்பார்கள்

வளர்த்த கூலி
படிப்பிச்ச கூலி
வரன் என்றதற்கான
பிரத்தியேகக் கூலி
கூட்டிக் கழித்து
ரொக்கமாக பத்து
இலட்சமும் இருக்கிற
வீடுமென நீட்டுவார்கள்.

முடிவைச் சொல்ல
காலத் தவணை
தந்து செல்வார்கள்
முடிவில்லாத தீர்வாகும்.
இன்று வரும் வரனின்
விலைப்பட்டியலாவது
கை இருப்புக்குள்
இருந்திட வேண்டும் இது
அம்மாவின் பிராத்தனை…

என்னிடம் சில
வினாக்கள் உண்டு
கைக்கூலியில்லை
பெண்மைக்கு பேரம்
என்றுமே இல்லையென
வரனிடம் கேட்டுவிடவே
காத்திருப்பு.
ஆண்மையுள்ளவனை
தேடுகின்றோம் .

ஆக்கம் கவிஞர்தயாநிதி