நீங்காத நினைவுகள்!

பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது!- இந்துமகேஷ்STS கலையகத்தின் முத்திரையுடன் வெளிவந்த முதலாவது இசைப்பேழை இது.புத்தாயிரம் ஆண்டில் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா எனும் சீரிய கலைஞனின் இசை ஆர்வத்தையும் தனித்துவத்தையும் பிரதிபலிக்கும் முதல் வெளியீடாக இது அமைந்தது.ஜெர்மனி பிறேமன் நகரில் 2000 வருடம் சித்திரைத் திங்களில் பூவரசு கலை இலக்கியப் பேரவையின் ஆதரவுடன் இதன் வெளியீட்டு விழா நிகழ்ந்தது.பூவரசு வைகாசி -ஆனி 2002இல் வெளியான பூவரசு 75வது சிறப்பிதழில் நமது கலைஞர் இசைத் தென்றல் எஸ்.தேவராஜா வழங்கிய செவ்வியில் இந்த இசைப்பேழை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்_பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக்கேட்கிறது என்ற இசைப்பேழைமூலம் இசையுலகில் நீங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்கள் என்ன? இரசிகர்களின் கருத்துக்கள் எவ்வாறிருக்கின்றன?நிச்சயமாக! இது எங்கள் சொந்த ஏஸ்.ரி.எஸ். ஒலிப்பதிவகத்தில் தயாரிக்கப்பட்டது. எனது பழைய ஒலிபெருக்கி அனுபவம் இங்கே எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. இந்துமகேஷ் அண்ணரும் நானும் இணைந்து பல புதிய பாடகர்களையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இருவரும் பாடல்களை எழுதியுள்ளோம். அத்தோடு எல்லாப் பக்கவாத்தியக் கருவிகளையும் நானே தனித்து மீட்டியுள்ளேன். எனது துணைவியார் ஒலிப்பதிவு உதவி செய்திருந்தார். தொழில்நுட்ப உதவி சிறீதர். பாடல் ஒலிப்பதிவில் சிக்கல்கள் ஏதுமில்லை. நான் நினைத்ததைவிட எல்லாப் பாடகர் பாடகிகளூம் திறம்படப் பாடியிருந்தார்கள். இதில் ஜனனி – தர்சினி இவர்கள் வானொலி நிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள். நான் சொல்லிக் கொடுத்ததை உள்வாங்கி உயிரூட்டிப் பாடினார்கள். மற்றக் கலைஞர்கள் மேடை அனுபவம் உள்ளவர்கள். வளர்ந்துவரும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதால் அவர்களைப்பற்றி இங்கு குறிப்பிட்டேன்.இசைப்பேழைக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. காகன் என்ற நகரிலிருந்து ஒருவர் கிட்டத்தட்ட அரைமணிநேரம் பாடல்கள்பற்றியும் இசைபற்றியும் தொலைபேசிமூலம் பாராட்டினார். அவர் தன் பாடல்களுக்கு இசை அமைத்துத் தரும்படியும் கேட்டுக்கொண்டார்.பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக்கேட்கிறது எனும் இந்த இசைப்பேழை 1998இல் வரவேண்டிய இசைப்பேழை. 2000 ஆண்டு வெளியானது. இந்த இசைப்பேழை என்னில் எழுந்த ஆதங்கத்தால் வெளியானது. சு.தயாபரன்மூலம் அறிமுகமான இந்துமகேஷ் அண்ணரின் தொடர்பு பூவரசு ஆண்டுவிழா மேடைகளின் இசைப்பணிக்குள் என்னை இறுக்கமாக்கியது. நாட்டுக்காக மேடையேறிய நாம் வெளியே மேடை நிகழ்வு பூவரசின் நிகழ்வே. இதில் ஜோன்சன், பேபி ஜோன்சன் இவர்களை என்னோடு பூவரசு மேடைகளீல் இணைத்துக் கொண்டேன். இந்துமகேஷண்ணர் எழுதிய பாடல்கள்அண்ணர் பாலசுப்பிரமணியம் அவர்களின் மெட்டுடன் ஒரு சிலது எனது இசையிலானது.பின் என்னிடம் முழுப்பணியுமாகத் தொடர்ந்தது. ஒருமுறை இந்துமகேஷ் அண்ணர் சொன்னார்- இந்த ஆண்டு விழாவில் உங்கள் பாடல்கள்தான் முழுமையாகவென்று. இல்லை அப்படி நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறி அவரது பாடல்களோடு எனது பாடல்களும் இணைத்தேன். இவ்வளவும் ஏன் சொல்கிறேனென்றால் இவர் எப்படித் தெரிந்து கொண்டார் என்னிடம் இசையமைக்கும் திறனும் பாடல்கள் எழுதும் திறனும் உண்டென்பதை. இவர் மற்றவர் திறனை மனக்கண்ணால் எடைபோடுவதில் வல்லவர். 000இசைத்துறையில் உங்கள் எதிர்காலத்திட்டங்கள் என்ன?இப்போதைக்கு ஆங்கிலப்பாடல்கள். ஈழத்தவர்தான் செய்கிறார். அதற்கான என் இசைப்பணி முடிவடைந்து ஆறு மாதங்களாகின்றது. அவர் பாடி முடித்தால் அந்த இசைப்பேழை வெளிவரும். அவர் பெயர் மோஹனதாஸ். இவர் கோப்லன்ஸ் என்னும் நகரில் வாழ்பவர். தற்சமயம் ஒருவர் வானலையில் தான் எழுதிமுடித்த பாடலுடன் நோர்வே எஸ் பாஸ்கரன் பாடலும் சிலது இணைத்து என்னிடம் இசையாக்கத்துக்கு வந்தது. அந்த இசைப்பணியும் இன்னும் இரண்டு கிழமைகளில் முடிந்துவிடும். அவர் பாடி முடித்தால் அதுவும் விரைவில் வெளியாகும். பின் சிறுபிள்ளைகளைப் பாடவைத்த ஒரு இசைப்பேழையும் எமது பாடல்கள் அடங்கிய இசைப்பேழைகளும் வெளிவரவுள்ளன.000இசைத்தென்றல் எஸ்.தேவராஜா அவர்களின் இந்தப்பேட்டி பூவரசில் வெளிவந்து ஒரு தசாப்தத்துக்கும் மேலாகிவிட்டது. இந்த இடைக்காலத்தில் எஸ்.ரி.எஸ் கலையகம் எத்தனையோ வெளியீடுகளைக் கண்டிருக்கிறது. அவைபற்றிய முழுவிபரங்களை stsstudio.com இணையத் தளத்தில் காணலாம். 000இவ்வாண்டு தமிழருவி விருது 2017க்கான – ஊடகத்தென்றல் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் திரு. தேவராஜா அவர்கள். சக கலைஞர்களை வாழ்த்துவதில் முன்னிற்கும் அந்த நல்ல மனம் வாழ்க என வாழ்த்துவதில் மனநிறைவு கொள்கிறோம் நாம். அவரது கலைப்பயணம் மேன்மேலும் மேன்மைபெற வாழ்த்துவோம்!-இந்துமகேஷ்