நீங்காத நினைவுகள்!

இரங்கும் இல்லத்தில்
எமது கலைஞர்கள்!

1992 ஐப்பசித் திங்களில் ஒரு நாள்.

„ ஜேர்மனியில் பல பாகங்களில் மலர்ந்து மணம்கமழ்ந்து மணிகளாய்ச் சிதறிக் கிடக்கும் கலைஞர்கள், வாழும்கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுப்பணியாளர்கள் அனைவரையும் ஓரணியில் சேர்த்து பலவண்ணம் நிறைந்த மலர்மாலையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். 17.10.92 சனிக்கிழமை அன்று பிராங்க்பேர்ட்டில் மாலை 4மணிமுதல் இரவு 10மணிவரை வருகைதரும் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும் அவர்களைச் சமமாய்க் கௌரவித்து பரிசில்கள் வழங்கவும் அவர்கள்பற்றிய சஞ்சிகை ஒன்றை வெளியிடவும் இராப்போசனம் வழங்கவும் அதே மண்டபத்தில் சிறியபிள்ளைகளை பராமரிக்கவும் ஒழுங்குகள் செய்துள்ளேன். ஈழநாடு ஆதரவில் இரங்கும் இல்லத்தினரால் நடாத்தப்படும் இந்தக் கலைஞர்கள் கூடலுக்குத் தாங்கள் குடும்பத்தினருடன் சமூகம் தந்து சிறப்பிப்பீர்களென நம்புகிறேன்….!“

-சில மாதங்களுக்கு முன்பு (1992இல்) அன்பர் திரு ஸ்ரீபதி அவர்களின் அழைப்புக் கிடைத்திருந்தது. வாழும்போதே கலைஞர்களைக் கௌரவிக்கும் பணி உயரியது. வளரும் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பது. இன்று இலைமறை காய்களாய் (ஸ்ரீபதியின் தமிழில் மலர்களாக) பரவிக் கிடக்கும் அத்தனை கலைஞர்களையும் ஒன்றுதிரட்டும் பணி அத்தனை சுலபமானதா? சிரமமான இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துமுடித்திருக்கிறார் திரு ஸ்ரீபதி.

அந்த மாலைப்பொழுது அறிவிப்பாளர் ஜெகனின் அழகு தமிழில் ஆனந்தமாக ஆரம்பித்தது. பிஞ்சுக் கலைஞர்களிலிருந்து கனிந்த கலைஞர்கள்வரை கலந்துகொண்ட அந்த மண்டபம் ஒரு கலைத்கூடமாகவே காட்சிதந்தது.

„…இந்த மண்டபத்தில் நிற்கும்போது யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நின்று உரையாடிக் கொண்டிருப்பதுபோன்ற உணர்வு தோன்றுகிறது! ஏன்று தலைமை உரையில் குறிப்பிட்டார் ஈழநாடு ஆசிரியர் எஸ்.எஸ்.குகநாதன்.

மேலை நாட்டவர்கள் நமது கலை கலாச்சாரங்களைப் பின்பற்ற முனையும் இக்காலக் கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்கின்ற நம்மவர்களில் பலர் மேலைத்தேசத்தவரின் நாகரீகத்தைப் பின்பற்ற முனைவது வேதனைக்குரியது!“ என்றும் அவர் குறிப்பிட்டார்.
கலை கலாச்சாரங்களை வளர்த்தெடுக்க முனையும் கலைஞர்கள் மத்தியில் அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். சமுதாயத்தில் மாற்றங்களைக் கொணர கலைஞர்களால் முடியும். நம்மோடு பின்னிப் பிணைந்துவிட்ட நமது மொழி கலை கலாச்சாரங்களுக்:கு நாம் வாழும் நாடுகளில் எத்தகைய இடத்தைப் பெற்றுத்தரப் போகிறோம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

„இப்போது கலைஞர்கள் சந்திப்பில் கலந்துகொண்டவர்களைத் தவிர இங்கு சமூகமளிக்காத ஏனைய கலைஞர்கள் பற்றிய விபரங்களையும் திரட்டி கலைஞர்களின் விபரங்களடங்கிய சஞ்சிகையின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட ஆவன செய்யப்படவேண்டும்“ என்று கலைவிளக்கு சஞ்சிகையின் ஆசிரியர் திரு பாக்கியநாதன் அவர்கள் குறிப்பிட்டார்.

அனைத்துக் கலைஞ்களையும் அணிதிரட்டி ஈழ அகதிகளின் இன்னல் துடைக்க இரங்கும் இல்லத்தின்மூலம் செயலாற்றிவரும் திரு ஸ்ரீபதி அவர்களுக்கு ஒவ்வொரு கலைஞரும் கைகொடுக்க வேண்டும் அவர்தம் சேவை சிறக்க வாழ்த்துரைக்கவேண்டும்.

திரு ஸ்ரீபதி அவர்களுக்கு இத்துறையில் பெருமளவு ஒத்தழைப்பு நல்கிவரும் கவிஞர் முகில்வாணன் அவர்களுக்கும் பூவரசு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

பூவரசு இனிய தமிழ் ஏட்டின்மூலம் எழுத்தளவில் நான் சந்தித்துக்கொண்ட சகோதர சஞ்சிகையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பலரை முகம்காண வைத்த கலைக்காவலன் ஸ்ரீபதி அவர்களுக்கும் இரங்கும் இல்லத்துக்கும் நன்றி

-இந்துமகேஷ்
(பிரசுரம்: பூவரசு கார்த்திகை- மார்கழி 1992)