நீண்ட காலத்துக்குப் பின், என் தாய் வீட்டுக்குப் போயிருந்தேன்……..

57 ஆண்டுகளுக்கு முன்பு 10 வயதுச் சிறுவனாக, முதன்முதலில் ‘சிறுவர் மலர்’ நிகழ்ச்சியில் ( நேரடி ஒலிபரப்பு!) நான் கலந்துகொண்ட ‘முதலாம்’ இலக்கக் கலையகத்தின் வாயிலில் நின்று பழைய நினைவுகளை மீட்டினேன்.
வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வோம்… எனும் எதிர்பார்ப்பு ஏதும் இன்றி, பள்ளிதோழனுக்கு வந்த அழைப்பினைக் கண்டு, அவனோடு ஒட்டிக்கொண்டு, அழையா விருந்தாளியாய், வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு ‘ஊடகத்துறையில்’ இந்த நீண்ட நெடிய பயணத்தை ஆரம்பித்து வைத்த நதிமூலம் அது.
சுற்றிலும் பார்வையை மேயவிட்டேன்.
1 முதல் 10 கலையகங்கள். அத்தனை கலையகங்களின் சுவர்களிலும் ஒலிபரப்புத்துறையோடு சம்பந்தப்பட்டவர்கள் பலரது நிழற்படங்கள். ஆனால்….
தமிழ் ஒலிபரப்புக்குப் பெருந்தொண்டு புரிந்த எந்த ஒருவரது நிழல்படத்தையும் அங்கு காணவில்லை….!!!
நாம் எந்த அளவு புறக்கணிக்கப் பட்டிருக்கிறோம் என உணர்ந்தபோது…..
நெஞ்சு கனத்தது, வலித்தது.
இரண்டாம் தரப் பிரஜைகளாய் இருந்த நிலைமாறி, மூன்றாம் தரப் பிரஜைகளாகிவிட்டோமா….???