நீதியின் கோபம்…

எங்களின் வாசலில் எவனோ ஒரு காட்டான்
எழும் இந்தப் பூசலில் வேறொரு நாட்டான்.
ஆளுக்கு ஆள் நின்று அட்டகாசம் பாரு
அடங்க மறுத்தால் பயங்கரவாதி என்று பேரு…

உரிமை கேட்டால் மறுக்கப் பல நாடு
உணர்வு கெட்டால் வாழ்வு சாம்பல் மேடு.
நெருப்பாய் நில்லு நீ தான் சாதனை ஏடு
நெஞ்சத்தின் வலி தீரக் கலையள்ளிப் பாடு…

உலகத்தின் மயத்தில் நீ உட்காரும் அரசு
உணர்வைப் பெருதாக்கி கொட்டடா முரசு.
வலியது வாழும் செயல் தீர்ப்பே பரிசு
வல்லமை இல்லாத இனம் உலகத்தின் தரிசு…

நீதியாய் இருந்தால் கோபம் கூட உன் சிறப்பு
நிழல் தாண்டிய நிஜம் உன் உரிமையின் பொறுப்பு.
காணும் கண்கள் கலங்கிட ஏன் இந்தக் கறுப்பு
காவியக் கருவாகு நிலைக்கட்டும் தமிழ் இருப்பு…

நீ காலக் கடவுள் படையொரு பெரும் யுகம்
நிழல் தரும் போலியைக் கிழிக்கட்டும் புலி நகம்.
இனமென்ற இதயத்தில் பூக்கட்டும் விடிகாலை
இது தான் நீதியென்று நட நட நமதாகும் நாளை…

கலைப்பரிதி.