ந.சிவசுப்பிரமணியம் எழுதிய ‚மருந்தில்லா மருத்துவம்‘ நூலின் வெளியீட்டு விழா.

ஈழத்தின் போருக்குப் பின்னரான நூல்களின் வரவுகளில் இன்னுமொரு தனித்துவமும், மக்களுக்கு அவசியமானதுமான நூலொன்று வெளியீடு கண்டுள்ளது. போர்க்காலம் மற்றும் போருக்குப் பிந்திய காலம் என்பவற்றில் வன்னியில் மருத்துவப்பணி ஆற்றியவரும் தொடர்ந்து இப்பணியைச் செய்து

வருபவருமாகிய ‚வாணி வைத்தியர்‘ என அறியப்பட்ட ஆயுள்வேத வைத்தியர் ந.சிவசுப்பிரமணியம் எழுதிய ‚மருந்தில்லா மருத்துவம்‘ நூலின் வெளியீட்டு விழாவானது 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு வன்னியின் இனிய வாழ்வு இல்ல கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. வள்ளுவர்புரம் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வழங்கிய இவ்வெளியீட்டு விழா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.சத்தியமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டார். ‚தமிழ் விருட்சம்‘ செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

வரவேற்பினைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஆயுள்வேத மருத்துவத்தின் தந்தை என சிறப்பிக்கப்டும் அகத்தியருக்கான மாலை அணிவிப்பினை ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர் த.முத்துலிங்கம் அணிவித்தார். வரவேற்பு நடனத்தினை பாரதி மகா வித்தியாலய மாணவிகளான கனிக்கா மற்றும் சங்கீர்த்தனா ஆகியோர் வழங்கினர். வரவேற்புரையினை யோ.புரட்சி வழங்கினார்.

ஆசியுரையினை விசுவமடு அதிசய விநாயகர் ஆலய குருக்கள் இரகுநாத வாசவசர்மன் வழங்கினார். வாழ்த்துரைகளை சுதந்திரபுரம் அ.த.க பாடசாலை அதிபர் மேகநாதன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி.சத்தியமூர்த்தி, ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர் வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.

நூலினை நிகழ்வின் பிரதம விருந்தினர் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை யாழ்.பல்கலைக்கழக உளவியல் விரிவுரையாளர் திருமதி இராஜ்குமார் அபிராமி அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக உளவியல் விரிவுரையாளர் அ.கிருத்திகா அவர்கள் சார்பாக அவரது சகோதரன் எழில்குமரன் பிரதியினை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவருக்கும் பிரதிகள் வழங்கப்பட்டன.

நூலாசிரியர் மருத்துவர் ந.சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு வவுனியா தமிழ்விருட்சம் சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசில் அளிக்கப்பட்டது. இக்கெளரவத்தினை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினைச் சேர்ந்த இராஜ்குமார் அவர்கள் தனது பாரியார் சகிதம் அளித்தார்.

நூலின் ஆய்வுரையினை கிளிநொச்சி உள்ளூராட்சி திணைக்களத்தினைச் சேர்ந்த திருமதி சண்முகராசா மணிமேகலை ஆற்றினார். யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையினைச் சேர்ந்த வ.ஆதவன் நூல் நோக்குரை நிகழ்த்தினார்.

இனிய வாழ்வு இல்லச்சிறுமி தமிழினி நிகழ்வில் பாடலிசைத்தார். இனிய வாழ்வு இல்லத்திற்காக நூலாசிரியரின் உதவுதொகையும் வழங்கப்பட்டது. இறுதியாக ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை ‚மருந்தில்லா மருத்துவம்‘ நூலின் ஆசிரியர் மருத்துவர் ந.சிவசுப்பிரமணியம் வழங்கினார்.

இன்றைய காலச்சூழலில் தேவையற்றதும், பக்கவிளைவுகளை அளிக்கக்கூடியதுமான மருந்துகளின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இயற்கையான மருத்துவ முறைமைகளை அளிக்கும் ‚மருந்தில்லா மருத்துவம்‘ நூலானது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய அரிய நூலென்பதை நிகழ்வில் கலந்துகொண்டோர் போற்றிச் சென்றனர்.