பத்து வயதுச் சிறுமி செல்வி ஆரியா பாஸ்கரன் அவர்களின் பரநாட்டிய அரங்கேற்றம்

பத்து வயதுச் சிறுமி செல்வி ஆரியா பாஸ்கரன் அவர்களின்
பரநாட்டிய அரங்கேற்றம் இன்று கலைத்தவம் புரிந்தது.

வெற்றிமணியின் வளர்கலை விருது செல்வி ஆரியா பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டது.

யேர்மனி சத்திய நிருத்தியஸ்தானா நடனப்பாடசாலை மாணவியும், திரு திருமதி பாஸ்கரன் அவர்களது புதல்வியும் கலாவித்தகர் நாட்டியகலாஜோதி திருமதி லாவண்யா நிரோஷன் அவர்களின் முதல் அரங்கேற்ற மாணவியுமான செல்வி ஆரியா பாஸ்கரனது அரங்கேற்றம் 01.11.2018 வியாழக்கிழமை மாலை வூப்பெற்றால் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நடராஜர் பூசையை வூப்பெற்றால் கனகதுர்க்கா அம்பாள் பிரதம குரு நிகழ்த்த வாழ்த்துரைகளை கம் காமாட்சி பிரதம குரு பிரதிஸ்ட கலாநிதி பாஸ்குருக்கள் அவர்கள் வழங்கினார்கள்.

பிரதம விருந்தினராக திருமதி லாவண்யா நிரோஷன் அவர்களின் குருவும், சலங்கை ஒலி நாட்டியப்பள்ளி அதிபருமான நாட்டியகலாரத்தனா திருமதி சாவித்திரி இமானுவேல் Dip.BA,MA அவர்களும் சூரிச் திருக்கோணேஸ்வரர் நடனாலயம் திருமதி மதிவதனி சுதாகரன் PHD அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பத்துவயது நிரம்பிய செல்வி ஆரியாவின் நடன அசைவுகள் யாவும் தலைசிறந்த ஒரு நர்தகியாக வருவதற்கான முத்திரை பதித்தது. கலாவித்தகர் லாவண்யா நிரோஷன் அவர்களது கற்பித்தல் திறன் யாவரையும் அதிர வைத்தது. செல்வி ஆரியாவின் ஞாபக சக்தியும், நுண்ணிய கவனிப்பும், இளமயிலுக்கு கிடைத்த பெரும் கொடையாக அமைந்தது.
செல்வி ஆரியாவின் அரங்கேற்றம் லாவண்யாவிற்கு முதலவதாக அமைந்தாலும், இது நான்காவது தலைமுறையின் கலைவெளிப்பாடு என்பது கவனிக்கத்தக்கது.

கவிமாமணி பிரமஸ்ரீ அமரர் மணிஐயர் அவர்களது மாணவி நாட்டியகலாரத்தனா திருமதி சாவித்திரி இமானுவேல் அவர்கள். இவர்களது மாணவி திருமதி கலாவித்தகர் லாவண்யா நிரோஷன் அவர்கள். இன்று அரங்கேற்றம் கண்ட செல்வி ஆரியா பாஸ்கரன் அவர்கள், திருமதி லாவண்யா நிரோஷன் அவர்களது மாணவி. இந்த சிறப்பினை அரங்கேற்வேளையில் அவதானிக்க முடிந்தது.
வாழ்த்துரை வழங்கிய வெற்றிமணி சிவத்தமிழ் பிரதம ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் BFA அவர்கள் நாட்டியச் செல்விக்கு வெற்றிமணியின் வளர்கலை விருதினை கவிமாமணி பிரம்மஸ்ரீ அமரர் மணிஐயர் பாதம்பணிந்து வழங்கினார்.

இந்த விருது தலைமுறை ஒழுங்கில் மேடையில் கையளிக்கப்பட்டது சிறப்பான விருந்தாக அமைந்தது.
வாழ்த்துரைகளை வித்தியாபூசணம் திருமதி மீரா நித்தியானந்தன் மற்றும் கவிமணி திரு.குகதாசன் ஆகியோர் வழங்கினர்.

பக்கவாத்தியக் கலைஞர்களாக நட்டுவாங்கம் திருமதி கலாவித்தகர் லாவண்யா நிரோஷன் அவர்களும் அவரது சகோதரிகளும், பாட்டு மதுரக்குரலோன் திரு.சி.கண்ணன் அவர்களும், செல்வி அனுஷியா கண்ணன் அவர்களும் சிறப்புறப் பாட, மிருதங்கம் லயப்பிரபாகம் சூடாமணி கலாஜோதி திரு.பிரசாந் பிரணவநாதன் அவர்களும், வயலினை வயலின் இசைத்தென்றல் நெய்வேலி எஸ் ராதா கிருஸ்ணன் அவர்களும் சிறப்புற வாசிக்க அரங்கேற்றம் மேலும் மெருகேறியது. பத்துவயதுச் சிறுமியின் பரநாட்டிய அரங்கேற்றம் பக்குவமாய் ஒரு கலைத்தவம்போல் அரங்கேறியது.
நிகழ்ச்சிகளை ரமேஸ் ஜெயக்குமார் சிறப்புற தொகுத்து வழங்கினார். தொகுப்பு: சிவப்பரியன்