பல்கலைவேந்தர்‘ சில்லையூர் செல்வராசன் எழுதிய ‚ஈழத்தில் தமிழ் நாவல்

பல்கலைவேந்தர்‘ சில்லையூர் செல்வராசன் எழுதிய ‚ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சிபொதுவாக நாவல் இலக்கியமென்று ஆய்வுகள், திறனாய்வுகள் செய்பவர்கள் ஏற்கனவே பலர் எழுதியவற்றை ஆதாரங்களாகக்கொண்டு தம் ஆய்வுகளைச் செய்திருப்பார்கள். சில சமயங்களில் அந்நாவல்களை அவர்கள் வாசித்துக்கூடவிருக்க மாட்டார்கள். இன்னுமொரு முக்கியமான விடயம்: இவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே நூலுருப்பெற்ற நாவல்களை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள். இத்தகைய காரணங்களினால் இவர்களது ஆய்வுகள் அல்லது திறனாய்வுகள் உண்மையான ஆய்வுகளாகவோ அல்லது திறனாய்வுகளாகவோ இருப்பதில்லை. உண்மையில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் , குறிப்பிட்ட காலகட்டத்துக்குரிய நாவல்களை ஆய்வுச்செய்ய விரும்பும் எவரும் நூலுருப்பெற்ற நாவல்களுடன், பத்திரிகை, சஞ்சிகைகளில் தொடர்களாக வெளியான நாவல்களையும் கணக்கிலெடுத்து ஆராய வேண்டும். குறைந்தது தம் ஆய்வுகளின் இறுதியில் அவற்றை வெளிப்படுத்தும் பட்டியலையாவது இணைத்திருக்க வேண்டும். இவ்விதமான எண்ணப்போக்குள்ள நான் அண்மையில் ‚பல்கலைவேந்தர்‘ சில்லையூர் செல்வராசன் எழுதிய ‚ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி ‚ நூலினை வாசித்தபோது மிகவும் பெரிதும் ஆச்சரியமும், சந்தோசமும் அடைந்தேன். அந்நூலில் அவர் நூல்களாக வெளியான நாவல்களுடன், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியாகி இன்னும் நூலுருப்பெறாத நாவல்களையும் உள்வாங்கியிருந்தார். உண்மையில் இது போன்ற ஆய்வுகளே தற்போது அவசியம். ஏனென்றால் இத்துறையில் மேலும் ஆய்வுகள் செய்பவர்களுக்கு இவையே மிகச்சிறந்த முதனூல்களாக இருக்க முடியும்.இவ்விதமான எண்ணப்போக்கு கொண்டுள்ள எனக்கு நூலாசிரியரின் இந்நூலின் ஆரம்பப்பக்கங்கள் மகிழ்ச்சியைத்தந்தன. அதற்குக் காரணம் அவருக்கும் இவ்விதமான எண்ணப்போக்கே இருந்திருக்கின்றது. அதன் காரணமாகவே இவ்விதமான ஆய்வு நூலொன்றினை அவர் எழுதினார் என்பதை அவற்றில் விரிவாகவே விபரித்திருக்கின்றார். இந்நூலின் இறுதியில் 1891 -1962 காலகட்டத்தில் இலங்கையில் வெளியான நாவல்களின் பட்டியலையும் இணைத்திருக்கின்றார் ஆசிரியர். அதற்காக அவர் பாராட்டுக்குரியவர்.இந்நூலினை வாசிக்க விரும்பினால் நூலகம் தளத்தில் வாசிக்க முடியும். அதற்கான இணைய இணைப்பு: http://noolaham.net/project/01/60/60.pdf