பாசமலர்கள்…. -இந்துமகேஷ்

பாசமலர்கள் ஆயிரமாய்ப் பூத்துக்குலுங்குது – அதைப்
பறித்துக் கொள்ள மனங்கள் இல்லையே!
நேசத்துக்காய் முகங்கள் இங்கே காத்திருக்குது -அதை
நினைத்துக்கொள்ள நெஞ்சம் இல்லையே!

வாடிவிழப் பூத்ததுவா இந்தமலர்கள் -அன்பு
மாலையிலே சேர்த்துக் கொள்வீரா?
தேடிவரும் பகைவருக்கா பலியிங்கு நாங்கள்
தெரிந்துகொண்டும் தூங்குகிறீரா?

வாடிவிழப் பூத்ததுவா இந்தமலர்கள் – அன்பு
மாலையிலே சேர்த்துக் கொள்வீரா?

சோலையாக இருந்ததேசம் பாலையாகுதே -இன்னும்
தொலைவில்தானே இருந்து பார்ப்பீரா?
நாளைநாளை என்றிருந்தால் இன்று என்னாகும்
நாங்கள்வாழ வழிகள் செய்வீரா?

வாடிவிழப் பூத்ததுவா இந்த மலர்கள் -அன்பு
மாலையிலே சேர்த்துக் கொள்வீரா?

கன்றைப் பிரிந்தபோதும் அதன் தாய்ப்பசு கதறும் – கோழி
குஞ்சைக் கொல்லப் பருந்து வந்தால் விரட்டியடிக்கும்!
ஒன்றுமறியா ஜீவனெல்லாம் உள்ளம்துடிக்கும் – நீங்கள்
உள்ளம்படைத்த மனிதர் என்ற உணர்வே இல்லையா?

வாடிவிழப் பூத்ததுவா இந்த மலர்கள் -அன்பு
மாலையிலே சேர்த்துக் கொள்வீரா?