பிரான்ஸ் திவ்யநாதன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா

ஈழத்தின் வன்னியில் நிறைவேறிய, பிரான்ஸ் திவ்யநாதன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா

புலம்பெயர் தேசத்துப் படைப்பாளிகள் தமது நூல்கள் தாயகத்தில் அறிமுகமாகுவதில்தான் அதிக நிறைவு கொள்கின்றனர். தாம் பிறந்த மண்ணில் தமது படைப்பு உலாவருவதுதான் அவர்களுக்கு திருப்தி.

ஏற்கனவே பிரான்ஸ் மண்ணில் வெளியீடு கண்ட இரு நூல்கள் வள்ளுவர்புரம் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ ஊடாக ஈழத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. பிரான்ஸ் திவ்யநாதன் செல்வத்துரை எழுதிய ‚கட்டை விரல்‘ (பல்பக்க பதிவுசார் நூல்),சிதறல்(கவிதை நூல்) ஆகியவற்றின் அறிமுக விழாவானது 03.06.2017 சனிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு வன்னியின் இனிய வாழ்வு இல்ல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு இலக்கிய விமர்சகரும், முத்து ஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபருமான ‚கம்பீரக் குரலோன்‘ சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக ‚டான் தொலைக்காட்சி‘ நிகழ்ச்சி மேலாளர் ‚பண்பலை வேந்தன்‘ ரி.எஸ்.முகுந்தன் கலந்துகொண்டார்.

ஆரம்ப நிகழ்வுகளை அறிவிப்பாளர் முல்லையூர் பிரணீவ் தொகுத்தளித்தார். விருந்தினர்கள் வரவேற்பினைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டது. அகவணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை இனிய வாழ்வு இல்லம் சிறார்கள் நிகழ்த்தினர். வரவேற்புரை மற்றும் தொடக்கவுரையினை யோ.புரட்சி வழங்கினார்.

ஆசியுரையினை சிவஸ்ரீ நவரத்தினம் வழங்கினார். புத்தளம் மண்ணிலிருந்து நூல் அறிமுக விழாவிற்கு வருகை தந்தோரை ஆசியுரையாளர் பாராட்டினார்.

தொடர்ந்து ‚அறிவிருட்ஷம் துரித கல்வி மேம்பாட்டு நிறுவனம்‘ சார்பாக வாழ்த்துரை வழங்கப்பட்டு நினைவுப் பரிசில் நூலாசிரியருக்கு வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவர் ஐ.எம்.சுரைஸ், பெண் படைப்பாளி முல்லை றிசானா ஆகியோர் இதனை வழங்க, மாற்றுத் திறனாளிகள் சூட்டி, சிறுமி தமிழினி ஆகியோர் ஏற்றனர். தலைமையுரையினைத் தொடர்ந்து அறிமுகவுரையினை கவிஞர் வே.முல்லைத்தீபன் ஆற்றினார். தொடர்ந்து ‚கட்டை விரல்‘, ‚சிதறல்‘ ஆகிய நூல்களினை நிகழ்வின் பிரதம விருந்தினர் டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி மேலாளர் ‚பண்பலை வேந்தன்‘ ரி.எஸ்.முகுந்தன் வழங்க முதற்பிரதிகளை பன்முகப் படைப்பாளரும், கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை அதிபருமாகிய மணலாறு விஜயன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவரும் நூலினை பெற்றுக்கொண்டனர்.

‚கட்டைவிரல்‘ நூல் தொடர்பான ஆய்வுரையினை பன்முகப் படைப்பாளரும், கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை அதிபருமாகிய மணலாறு விஜயன் நிகழ்த்தினார். பெற்றுக்கொண்டார். புலம்பெயர் படைப்பாளரின் ஆளுமைமிக்க படைப்பு இந்நூல் என்பதனை ஆய்வுரைஞர் சுட்டினார்.

‚சிதறல்‘ கவிதை நூல் தொடர்பான ஆய்வுரையினை கவிஞரும், வவுனியா ‚தமிழ் விருட்சம்‘ தொண்டமைப்பின் செயலாளருமான மாணிக்கம் ஜெகன் நிகழ்த்தினார்.

முல்லைத்தீவு படைப்பாளிகள் சார்பான போற்றலுரையினை புதுக்குடியிருப்பு யோகா பயிற்சிக் கல்லூரி இயக்குநர் ‚யோகாச்சார்ய‘ ஜெயம் ஜகன் வழங்கினார். தொடர்ந்து அறிவிருட்ஷம் துரித கல்வி மேம்பாட்டு நிறுவனம் சார்பாக பயிற்சி நூல்கள் பாடசாலைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினர் டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி மேலாளர் ‚பண்பலை வேந்தன்‘ ரி.எஸ்.முகுந்தன் பிரமத விருந்தினர் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகளில் தமிழ் மொழி பயன்படுத்துகை பற்றி அதிகமாக தனது கருத்துக்களை ரி.எஸ்.முகுந்தன் வெளிப்படுத்தினார்.

நன்றியுரையினை சமாதான நீதவான் மாதவராசா வழங்கினார். ஈழத்தின் யாழ்ப்பாணம் மட்டுவிலைச் சேர்ந்த திவ்யநாதன் அவர்கள் பிரான்ஸ் தேசத்தில் வசித்து வருபவர். இன்று அறிமுகம் செய்யப்பட்ட ‚சிதறல்‘ கவிதை நூலானது 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழில் அக்காலத்தில் வழக்கிலிருந்த சில எழுத்துக்களுடனேயே இன்றும் இந்நூல் அச்சாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ அறிமுகம் செய்த இவ்விரு நூல்களும் ஈழத்தின் நூலகங்களுக்கு வழங்கப்படவுள்ளது.