பிரான்ஸ் – நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் !

குறும்பட கலைஞர்களின் எதிர்பார்ப்புக்குரிய குறுந்திரை விழாவான பிரான்ஸ் – நாவலர் குறும்பட போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் இலங்கைத்தீவின் போருக்கு பிந்திய வாழ்வினை மையக்கருவாக கொண்டிருந்த இரண்டு குறும்படங்கள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளன.

இலங்கை உட்பட புலம்பெயர் தேசங்களிலும் இருந்து 25க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இப்போட்டியில் பங்கெடுத்திருந்தன.

பிரான்ஸ் – புங்குடுதீவு ஒன்றியத்தினால் 8வது ஆண்டாக நடாத்தப்பட்டிருந்த இப்போட்டியில் பிரதான நடுவராக தமிழக திரைஇயக்குனர் ஆர்.கே.செல்வமணி, துணை நடுவர்களாக நோர்வேயிய தேசிய தெலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இராஜன் செல்லையா, படைப்பாளர் சுதன்ராஜ் (பிரான்ஸ்) ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர்களினால் தேர்தெடுக்கப்பட்ட 9 குறும்படங்கள் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியிருந்தன.

முதன் மூன்று படங்கள் தரவரிசையில் சிறந்த குறும்படங்களாக தேர்வு செய்யப்பட்டு விருதும் பணமுடிச்சும் வழங்கப்படுவதோடு, 13 துணை விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் போருக்கு பிந்திய வாழ்வினைப் பேசிய படங்களாக புலம்பெயர் தேச தமிழர் அரசியலை விமர்சனபூர்வமாக அணுகிய வேடம் (பிரான்ஸ்) முதலாம் இடத்தினைப் பெற்றிருந்தது.

 

தமிழர் தேசத்தின் மீதான சிங்கள அரசின் ஆக்கிரமிப்பினை குறியீட்டுரீதியாக பேசிய ரணம் (தாயகம்)
இரண்டாம் இடத்தினை பிடித்திருந்தது. சாளினி சார்ள்ஸ் எனும் பெண் இயக்குனர் இதனை
இயக்கியிருந்தார்.

ஒரு நீள்படத்துக்குரிய திரைக்கதை முடிச்சுடன் உருவாகியிருந்த உயிருள்ள கனவே மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது.

Merken