புல்லென்றே நினைக்கின்றீர்..

பூவாகப் பிறந்திட்டாள்
புயலையும் தாங்குவாள்
புன்னகை பூக்கும் இவளை
புல்லென்றே நினைக்கின்றீர் ..?

மென்மையாய் பிறந்திட்டாள்
அன்பாலே கட்டுண்டாள்
அதிகாரம் செய்து நீர்
அடிமைத்தனம் செய்கின்றீர் ..

வீதி வழி செல்கையில்
வீண்வாதம் செய்கின்றீர்
கோயிலுக்கு போகையில்
மோகம் கொண்டு பார்க்கின்றீர் …

பாடசாலை செல்கையில்
பலாத்காரம் செய்கின்றீர்
கல்லூரி போகையில்
கடத்தித்தான் போகின்றீர் …

பேரூந்தில் பயணித்தால்
புகைப்படம் எடுக்கின்றீர்
வேலைக்குச் செல்கையில்
தீண்டிட முயல்கின்றீர் ;
ஆசையாய் பேசித்தான்
அடைந்திடத் துடிக்கின்றீர்…

பெண்மைக்குள் உணர்வுண்டு
புரிந்திட மறுக்கின்றீர் ..!
பாவப் பிறப்பென்றோ
பழிதீர்க்கப் பார்க்கின்றீர் …

பாரினிலே உமைப்படைத்த
அன்னையொரு பெண்ணல்லவா??
அறியாத மூடராய்
அறிவிழந்து நடக்கின்றீர் ..!

வரலாற்று நாயகியாய்
காலத்தால் நிலைப்பவள்
விடுதலை வேட்கையோடு
போராடிய வீரப்பெண்ணினம் !

புலியாகப் புறப்பட்டால்
பூமியே தாங்காது ,
பணிவாக நடப்பதால்
புல்லென்று நினைக்காதீர் ..!

– வேலணையூர் ரஜிந்தன்.

08.03.2019