**பூஜைக்கு வந்த பாதங்கள் **

தொட்டுப்பழகிய பின்
தொலைந்திடும் காதலல்ல,
தொட்டுப் பேசிடாத
தொன்மைத் தூயகாதல் அது.
.
பட்டும் படாமல் எங்கள்
பார்வைகளை பரிமாறி
பரஸ்பர முத்தமிடும்
பண்பான காதலது.

மொட்டுமனங்களை நாம்
மெல்லவிரிந்துமே எம்
மெல்லிதழால் சாடைபேசிடும்
மௌனமான காதலது.
.
பட்டுவண்ண ரோசாவின்
பால்முகம் காணவேண்டி
பாதைமுழுவதும் நானும்
பலமணிகள் பார்த்து நிற்க,
.
கிட்ட வந்த என்னவளோ
கீற்றாயொரு பார்வைதர.
கிறங்கி நானும் காதல்
கிறுக்கனாயும் மாறிடவே

தட்டாம் பூச்சிகள் போல்
தடம்மாறிய எம்மனங்கள்,
தரணி எங்கும் தடையின்றி
தாராளமாய் பறந்ததுமே.
.
கட்டாக்காலிக் களையாக
கண்டபடி திரிந்த நானும் .
கல்லூரி் காரியாலயம் என ,
கடையேறி வாழ்வை மாற்றிட.

பொட்டுவைத்த பூங்கொடியின்
பரிவும் பராமரிப்புமே ,
பொன்னாக என்வாழ்வு
புலரக் காரணமான தென்பேன் .
*
சட்டைப்பையில் அன்றொருநாள்
சாதிக்கிளியவளின் காதல்மடலை
சலவையின் போது என்மூத்த
சசோதரி கண்டெடுத்ததுமே!!!!!!!
*
வட்டவட்ட எழுத்தாய் உள்ளதே!!
வடிவான பெட்டையோ என,
வில்லங்கம் அற்று வினவியதால்
விளையாட்டாக இருந்துவிட்டேன்.
.
திட்டாமல் விட்டவள் தானே ,
திருமணத்தை தடுக்கமாட்டாளென
திட்டவட்டமாக நம்பியே
திறந்தமனமாய் இருந்துவிட்டேன்.
.
பட்டுப் போகுமெம் காதல்
பாதியிலே என நானும்
பகல் கனவுகூடக் கணவில்லை,
பசுங்கிளியே என் பாசக்கிளியே.
.
மட்டமான அந்த சாதிப்பேயால்
மனங்கள் எத்தனையோ பிரிக்கப்பட்டு
மணங்கள் எத்தனையோ மறுக்கப்பட்டு
மனிதம் மட்டும் மாண்டு மரணமாகின.
.
கட்டம் கட்டமாக எங்கள்
காதல் கதையும் சிலநாளில்
களைத்துக் கலைந்து கண்ணீராகி
காணாமல் போனதே கொடுமையாக.
.
கட்டவேண்டிய கைகள் இங்கேயும்
காத்திருக்கும் கழுத்து அங்கேயும்
கெட்டிமேளம் எங்கோ கேட்கிறது கட்டுகிறான் தாலியைமட்டும் யாரோ.
.
பட்டுப்போன தனிமரமாய் ஆகிநானும்
பாதையிலே யாருமற்று நின்றுகொண்டு
பாசக்கிளியாவள் என்னைப்பிரிந்து போன
பாதச்சுவடுகளைத்தேடிப் பூஜிக்கிறேன்.
—பாத நேசன்