‚பெண் ஏன் அடிமையானாள்‘ வாசிப்பின் பகிர்வு

பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தினால் 30.12.17 அன்று நடத்தப்பட்ட பெண் ஏன் அடிமையானாள் என்ற ஈ.வே.ரா.பெரியாரின் நூலினை வாசித்து, உள்ளீடாகக் கொடுக்கப்பட்ட கருத்துக்களைத் தொகுத்து திருமதி.மிதிலா உரையாற்றியதைத் தொடர்ந்து,அங்கு சமூகமளித்திருந்தோர் தமது கருத்தக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் ஆண்களைவிட பெண்களே அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர்.

வி.சபேசன் தனது கருத்தை பதிவு செய்கையில்…..
‚புலம்பெயர் நாடுகளிலும் பெண்ணடிமைத்தனம் இருப்பதாகக் கூறி, இங்கும் வீடுகளில் பெண்களை பூட்டி வைத்துச் செல்வதைக் காண முடிகின்றது,ஆண்களால் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் சமூகத்திற்கு, பெண்களால்தான் பெண்கள் அடக்கப்படுகிறார்கள்‘ என ஆயிரம் வருடங்களாக கற்பிதம் செய்யப்படுகிறது என்பது மட்டுமல்ல, ஆண்கள் தம்மீதான பழியைப் போக்கிக் கொள்வதற்காக, நழுவிக் கொள்வதற்காக இப்படியான உத்தி முறையைக் கையாளுகிறார்கள் எனக் கூறினார்.

வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் தனது கருத்தை பதிவு செய்கையில்………….

‚பெண்கள் தாங்கள் எவ்வடிவற்றில் அடிமையாக்கப்படுகிறார்கள் என்பதை விபரமாக விளக்கமாகச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்‘.ஆனால் அங்க வருகை தந்திருந்த பெண்களால் தெளிவாக ‚இந்த விடயத்தில்தான்‘ என்பதை அவர்களால் சொல்ல முடியாதிருந்ததை காண முடிந்தது.

சுமித்திரன்(ஐபிசி) தனது கருத்தை பதிவு செய்கையில்…………

„இங்கே வந்திருக்கின்ற இந்த வயதொத்தவர்களிடையே ஆண் பெண் சமநிலை வேறுபாடு இருக்கலாம் ஆனால் எதிர்காலச் சந்ததியினரிடையே பெண் அடிமைத்தனம் என்பது இல்லாமல் போய்விடும்‘ என்று கூறினார்.

நகுலா சிவநாதன் தனது கருத்தைக் கூறுகையில்….
‚தனது கணவர் தனது சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் முழுச் சுதந்திரத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறியவர், தொடர்ந்து கூறுகையில் ஜேர்மனியில் பெண்கள் நடு ராத்திரியிலும் சுதந்திரமாக வீதியால் போகக் கூடிய பயமின்மையும் சதந்திரமும் உண்டு என்றார்….‘

கிருஸ்ணமூர்த்தி தனது கருத்தைப் பதிவு செய்கையில் ………

‚ஜேர்மனியில் பெண்கள் நடு இராத்திரியிலும் வீதியில் நடந்து செல்வதற்கு இந்நாடு இயற்றியுள்ள சட்டமே காரணம் என்றவர்,ஒருவர் தனது சுதந்திரத்தை மற்றவர்கள் தீர்மானிப்பதற்காக வழியை இவர்களாகவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்,மற்றவர்கள் என்ன நினைத்து விடுவார்களொனக் கவலைப்படுவதை பயம் கொள்வதை விட்டுவிட வேணும் என தனது கருத்தை
பதிவு செய்தார்.

இப்பகிர்வில் கலந்து கொண்ட பெண்ணொருவர் ‚மாமிமாரின் நிலைப்பாடு பற்றி கூறுகையில் மருமகள்களை மதிக்காத, அடிமைப்படுத்துகின்ற மாமிமாரே அதிகம்.பெண்களைப் பெண்களே அடிமைப்படுத்துகிறார்கள், உண்மையில் ஆண்கள்தான் அடிமையாக இருக்கிறார்அவர்கள் பாவம் எனத் தமது கருத்தைப் பதிவு செய்தார்.

கலைச்செல்வி தனது கருத்தைப் பதிவு செய்கையில்….

‚ நான் விரும்பிய வேலை எனக்குக் கிடைக்க வேண்டும். எனது தீர்மானங்கள், எனது எண்ணங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றதுடன் குடும்ப ரீதியாக நான் எடுக்கும் தீரமானங்களை எனது கணவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவர் தனது கணவர் முழுச் சுதந்திரமும் அளித்திருப்பதாகக் கூறினார்.

சிறிஜீவகன் நீண்டதொரு விளக்கத்தை கொடுக்கையில்…….

‚இனவிருத்திக்கான ஆணினும் பெண்ணினதும் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கூறியதுடன், ஆரம்ப காலகட்டங்களில் ஆண் வெளியில் சென்று வாழ்வதற்கான உணவு போன்றவற்றைத் தேடி வருகையில் பெண் வீட்டிலிருந்து குடும்ப பராமரிப்பு வேலைகளையும் பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஈடுபட்டிருந்தாள். பிள்ளைகளை தாய் கண்காணித்து வளர்க்கும் போதுதான் பிள்ளைகள் பெறுமதியானவர்களாக உருவாவார்கள் என்ற எண்ணம், காலப்போக்கில் வீட்டின் பராமரிப்புகளை செய்த பெண் நாளடைவில் வீட்டில் சமைப்பதற்கும் ஆணுக்கு சுகம் கொடுப்பதற்குமாக சமூகம் அவளை நிர்பந்தித்துவிட்டது என்றார்.

திருவள்ளுவர் கூறிய ‚தெய்வம் தொழா…’என்று தொடங்கும் திருக்குறள் இக்காலத்திற்கு ஏற்புடையது அல்ல என்றதுடன், தனக்கு எவ்விதத்திலும் பொருந்தாத மனைவியை விட்டுவிலகி தனக்குப் பொருத்தமான பெண்ணை மனைவியாக்கிக் கொள்வதிலும் தவறில்லை என்று சொன்ன பெரியாரின் கருத்திலும் தனக்கு உடன்பாடில்லை என்றவர், முறையான விவாகரத்தை நாடாது, வாழ்ந்த மனைவியை விட்டு விலகி இன்னொரு பெண்ணை தேர்வு செய்வது நீதியற்றது என்றார்.

ஏலையா க.முருகதாசன் தனது கருத்தைப் பதிவு செய்கையில்……

‚இங்கே பேசிய பெண்களிடம் ஒரு விடயத்தைக் கவனித்தேன்,அவர்கள் தமது கருத்தைப் பதிவு செய்துவிட்டு ‚இது எனது கருத்து பிழையிருந்தால் மன்னியுங்கள்‘ என்றனர். இதில் மன்னிப்புக்கு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவருக்கு தனது கருத்தைக் கூறும் உரிமை உண்டு, ஏற்றுக் கொள்வதோ அல்லது ஏற்றுக் கொள்ளாமல் விடுவதோ கேட்போரைப் பொறுத்தது.இன்னுமொரு விடயத்தைச் சொல்லியாக வேண்டும். வாசிப்பின் பகிர்வு என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன், இங்கு வெளிவரும் சஞ்சிகை பத்திரிகைகள் பற்றிய நிகழ்வை நடத்திய போது பெண்களில் இருவரே வந்திருந்தனர்.

ஆனால் இன்று நிறைப் பேர் வந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய சிந்தனையை அறிதலை மட்டுப்படுத்தி அதற்குள் உங்களை நீங்களே விலங்கிட்டு வைத்திருக்கிறீர்கள். பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளிவரும் ஆக்கங்களை வாசித்து உங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் கலந்துரையாடத் தயங்குகிறீர்கள். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கிறீர்கள‘;.
‚சமூகம் என்பது ஆணாலும் பெண்ணாலும் கட்டியமைக்கப்பட்டதே. இந்தக் கட்டமைப்புக்கு தேயான அலகுகளாக இருக்கும் அனைத்து விடயங்களுமே பொதுவானவை. அரசியல் பற்றியோ இலக்கியம் பற்றியோ பொருளாதாரம் பற்றியோ சமூகக் குணநலன்கள் பற்றியோ நீங்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுவதும் இல்லை, அதில் ஆர்வமும் இல்லை.இவற்றையெல்லாம் ஆண் வர்க்கம்: மட்டுமே பேசலாம் என்ற நிலைப்பாடு எக்காலத்திலும் இல்லை. நீங்களாகவே உங்களை ஒடுக்கி சுருக்கி வைத்திருக்கிறீர்கள். உங்கள் அறிவின் பரிணாம வளர்ச்சிக்கு எவராலுமே தடை ஏற்படுத்த முடியாது,நீங்கள்தான் உங்களுக்கு தடையாக இருக்கிறீர்கள்‘ என்றவர்……

இலங்கை அரசியல் பற்றியோ உலக அரசியல் பற்றியோ தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை ஊடகத்திலும் இணையத்தி,லும் பார்த்தவற்றை வாசித்தவற்றை உள்வாங்கி அதுபற்றிய உங்களது பார்வையை கலந்துரையாடியிருக்கிறீர்கள் என்றால், இல்லவே இல்லை‘

சமூக நிகழ்வுகள் ஆண்களுக்கு மட்டுமே உரியவை அல்ல என்பதை உணருங்கள் என‘ தனது கருத்தைப் பதிவு செய்தார்.