பொங்குவம்…கவிதை கவிஞர்தயாநிதி

னதுக்குள்
ஒரு பொங்கல்
பொங்குவம்
வாருங்கோவன்..
சிங்களன் எங்களை
பொங்கிய சுடு
சத்தியமா ஆறிப்போச்சு
ஆனாலும் அடிக்கடி
பொங்கிறம்.
அடிப்பிடிச்சதையும்
அறியாமல் பொங்கிறம்..
கருகி மணம் எழும்பி
புகை மண்டலாமாக
ஒரு பொங்கல்
நடந்தெல்லே முடிஞ்சது.
திண்டதெல்லாம்
ஆரணை மறந்து போச்சு.
முள்ளிவாய்க்கால்
முற்றத்திலை முழசா
ஒரு கோலம் போட
பாக்கிஸ்தான் பயறு கொட்ட
இந்தியன் வெல்லம் கொட்ட
சீனன் சீன வெடி கொட்ட
சிங்களவன் கொளுத்திக்
கொண்டாடினான்..
நச்சு வாயு. அமிலம்
அது இது என அமர்க்களமான
பொங்கல் நடந்து போச்சு.
அமெரிக்கன் கண்ணைக் காட்ட
ஐநாக்காரன் அமசடக்கியாக
சர்வம் முழுக்க சம்பிரதாயப்
பொங்கல் பொங்கிச்சினம்..
அதுக்குள்ளை அவியாத
கஜூவும் பிளம்சுமா நாங்கள்
இப்ப பொங்கிறம் ஏற்கனவே
ஒற்றுமையை பொங்கியதாலை
இப்ப ஆளுக்கொரு பானையிலை
அம்பிட்ட இடத்திலை பொங்கிப் போடுவம்.
பொங்கினது தான் பொங்கிறம்
வாருங்கோ அதிசயப் பொங்கல்
ஒன்று பொங்குவம்.வாறியளே
நாளைக்கு….
ஒரு ஒற்றுமைப் பொங்கல்
பொங்கிப் பார்ப்பம்..

.ஆக்கம் கவிஞர்தயாநிதி