மன்னார் பெனில்

சக்கர நாற்காலியில்
சதா வாழ்ந்தாலும்
சரித்திர நாற்காலியில்
அமர்ந்து விட்டவன்
இன்றைய ஈழத்தில்
முயற்சியின் குறியீடு
முன்னுதாரண அளவீடு
கவிதை தன்னால்
கதிரை செய்பவன்
கதிரை இல்லாமலே
கடமை செய்தவன்
‚வலியின் விம்பங்கள்‘
கவிநூலாலே
வழியின் விம்பங்களை
காட்டிப் போனவன்.
‚ஈரநிலத்தை எதிர்பார்த்து‘
ஈழநிலநிலத்தை
எழுதிப் போனவன்.
இரு கைகளால்
சக்கரம் உருட்டி
ஈழமெலாம் பயணிக்கையிலே
முயற்சி இவன் முன்னே
முழந்தாட் படியிடுகிறது
ஒலிவாங்கி பிடித்து இவன்
உரை ஆற்றுகையில்
ஒளி வாங்கி
உளத்தில் தெரிகிறதே!
மாற்றுத் திறனாளி
இவன் பலர்க்கு
மாற்றம்தரு திறனாளி
ஏற்றமிகு உழவாளி
போற்றத்தகு புலனாளி
சிறகுடைந்த இளஞ்சிட்டென
சிலகாலம் கவி சொன்னான்
சிறகிலார்க்கு சிறகளித்து
சீர்பெறும் வழி தந்தான்
பொன்மனம் கொண்ட
பொன்மகன் இவனுக்கு
பொன்மன மனைவி
நல்மன துணைவி
தேவன் அளித்தார்
தேவதையால் ஆறுதலளித்தார்
இலக்கிய நதியே!
எம்நில ஜதியே!
மன்னார் பதி வாழ்ந்திருக்கும்
மானத்தமிழ்க் குடியே!
முடியே சூடி வாழ்
முத்தமிழ் தனை ஆள்.
யோ.புரட்சி,