மலர்கின்றாய்..



ஏதோ
சொல்கின்றாய்
மறக்காமல்
மலர்கின்றாய்..
ஏதேதோ
எண்ணங்கள்
எழாமலே
மெளனிக்க நீயோ
மறக்காமல்
மலர்கின்றாய்.
எல்லைகள்
கடந்தோம்
இல்லையென

உரைக்கோம்..
உணர்வுகளை…
உரிமைகளை..???
உள்ளூர்
உரிமையிழந்தோம்
வெளியூரில்
உரிமையை பெற்றோம்
பெற்றவரை
முகாம்களில் விட்டவராய்
உணர்வுகளையும்…!!!
பல வர்ண
முத்திரை குத்தப்பட்ட
பொதிகளானோம்.
அகதிகளாய்
அடிமைகளாய்
பரதேசிகளாய்..
எல்லைகள்
கடக்கின்றோம்..
மறக்கின்றோம்
எங்களை நாங்களே
மறக்கின்றோம்
ஆனாலும் நீ
மறக்காமல்
மலர்கின்றாய்..
சூடிக் கொள்ளவா
இல்லை வணக்கத்துக்கு
வழிகோலியாக…
ஏதோ உணர்த்துகின்றாய்..
உன்னை
கண்டதும் மேனி
சிலிர்க்கின்றது
உள் மனம்
கூசுகின்றது .
இதயத்தில் பிறப்பு
இடிக்கின்றது
இதய துடிப்பும்
கேலி செய்வது போல்
சத்தத்தால்….லப் டப்!!!
மலர்கள்
உன் ஒரு நாள்
வாழ்வுக்குள்
பிறந்த மண்ணுக்காய்
உன் தேசிய
அடையாளத்துக்காகவே
மலர்ந்து மணம்
பரப்புகின்றாய்.

ஆக்கம் கவிஞர் ரி தயாநிதி