மீளா அடிமை உமக்கே ஆளாய்….. – இந்துமகேஷ்

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், உணர்ந்தும் உணராமலும் தொடர்வது வாழ்க்கை.

இந்தத் தொடர்கதை இன்பம் நோக்கியது. முடிவில் இன்பம் பெறவென முயன்று கொண்டேயிருப்பது.

முழுதான இன்பத்தை அது ஒருபோதும் தொட்டதில்லை எனும்போது முற்றுப் பெறாத இந்தத் தொடரின் முடிவுதான் என்ன?

பிறப்பெடுத்த எல்லா உயிர்க்கும் இறப்பு என்பதே முற்றுப் புள்ளியாய்த் தெரிகிறது.

பிறப்பின் பின் மரணம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் எல்லோரும் அறிந்த இந்த ஒன்றில் அறியாமல் கலந்திருப்பதும் ஒன்றுண்டு. அது மரணத்துக்குப் பின்னும் ஒரு வாழ்வுண்டு என்பது.

„மரணத்துக்குப் பின் வாழ்வாவது.. அதை அறிந்துவந்து சொன்னவர் யார்?“ எனும் கேள்விக்கு நம்பத்தகுந்தமாதிரி பதில் சொல்லத் தெரியாமல், தெரிந்தாலும் தெளிவுபடுத்த முடியாமல் மௌனித்துப் போகிறார்கள் எல்லோரும்.

உணர்ந்தவர்களால் மட்டுமே இந்த உண்மையைக் கண்டுகொள்ளமுடியும்.

பிறருக்கு அதை உணர்த்தமுடியாமல் போவதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.

ஆனால் உணர்வதற்குத் தன்னைத்தான் உணரத் தலைப்பட்டவருக்கு இயலும்.

தன்னைத்தான் உணர்ந்தவன் பிற உயிர்கள அனைத்திலும் அன்பு கொள்கிறான். அன்பினால் பிறரை இவன் ஆளுகை செய்தபோதிலும் உண்மையில் இவன் தன்னையோர் அடிமையாகவே காட்டிக் கொள்கிறான்.

„நிலா நிலா ஓடிவா..!
நில்லாமல் ஓடிவா…
மலைமேலே ஏறிவா
மல்லிகைப் பூக் கொண்டுவா!“

– குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அதற்கு உணவூட்டும் தாய் அந்தக் குழந்தையின் மகிழ்ச்சிக்காகத் தன்னையும் குழந்தையாக்கிக் கொள்கிறாள்.

வானத்திலிருக்கும் நிலவு பூமிக்கு வருவதாவது.

நிலவுபற்றி அன்னைக்குத் தெரியும். குழந்தைக்குத் தெரியாது. ஒளிவீசும் ஒரு கிரகம் வானத்தில் உலாவந்துகொண்டிருக்கிறது என்பதை அது உணராது. ஆனால் நிலவின் ஒளியை அது உணர்கிறது. நிலவு பூமிக்கு வராது ஆனால் நிலவின் ஒளி வரும் என்று அன்னைக்குத் தெரியும். குழந்தையின் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாய் அவள் நிலவை அழைக்கிறாள். நிலவைப் பார்த்து மகிழ்ந்தபடி அன்னை ஊட்டும் அடுத்த பிடி உணவுக்காக வாயைத் திறக்கிறது குழந்தை.

இப்போது இங்கே இரண்டு குழந்தைகள்.

வானத்து நிலவை வாவென்று அழைக்கும் அன்னையும் தன் குழந்தையோடு குழந்தையாகிறாள். அறிந்ததை அறியாததாய், தெரிந்ததை தெரியாததாய், உணர்ந்ததை உணராததாய் காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் எல்லோரது வாழ்க்கையிலும்தான் வருகின்றன.

„எல்லாம் எனக்குத் தெரியும்!“ என்ற இறுமாப்பு ஒருவனை வீரனாகக் காட்டலாம். „சொல்லுங்கள் கேட்கிறேன்!“ என்று பணிவோடு நிற்பவன் அடிமைபோலத் தோன்றலாம். ஆனால் உண்மை வேறானது. அடிமைக் கோலம் என்பது பக்தியில் மூழ்கி நிற்பவனுக்கு பரவசம் தருவது.

உலக சுகங்களுக்காக மற்றவர்க்கு அடிமையாயிருத்தல் என்பது அவமானகரமானது.

தன்னலம் மறுத்து தன் சுகம் வெறுத்து மற்றவர் நலம் நோக்கும் உயரிய கொள்கைகளோடு பிறருக்காய் வாழ்வதென்பது பார்வைக்கு அடிமைத்தனம் எனப் பெயர் கொண்டாலும் அந்த அடிமைத்தனம் உயர்வானது.

அன்பினால் பிற உயிர்களை ஆண்டுகொண்டே அவர்க்கு அடிமையாய் சேவகம்செய்பவன் உண்மையில் இறைவனுக்கே அடிமையாகிறான். தன்னலத்துக்காக பிறரை அடக்கியாளுகின்ற வீரத்தைவிட மற்றவர்கள் பணிக்கெனத் தன்னைத் தாழ்த்திக்கொண்டு, „என்கடன் பணி செய்துகிடப்பதே!“ என வாழும் அடிமையே உயர்வானவன்.

அவன் இறைவனின் அடிமை.
அவனுள் இறைவன் வாழ்வதால் ஆள்பவனும் அவனே.

மாடும் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடும்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடுவித்தென தகம் புகுந்தாண்டதோர்
அற்புதம் அறியேனே!