(((முத்தமிட ஆசை)))முல்லை நேசன்


முற்றத்து மல்லிகையே எந்தன்
முன்நாள் நண்பி நீயே நினைவிருக்கா ?
முதிர்ந்திருப்பாயின்று நீயுமெனைப்போல்,
முல்லை மல்லி என்றே உன்னை நானும்
முன்பெல்லாம் செல்லமாய் அழைப்பேன் .
முன்னொரு காலத்திலே என் விளையாட்டு
முற்றவெளியே நீதானே,மறந்தாயோ ?
முகில் போன்று சடைத்து நீயும்
மூடி வளர்ந்திருபாய் பரந்த பந்தலாய் ,
முன்னிரவு ஆனதுமே நீ உந்தன்
முதிர்கன்னி மொட்டுக்களை ஓசையின்றி
முகமலரசெய்து மெல்ல விரிப்பாய் ,
மூன்று வீடு தள்ளிநின்றாலுமே,யாரும்
மூச்சு விட முடியாது உன் சுகந்தமின்றி .
முல்லைபூவே உந்தன் வாசத்தில் இருந்து
முடிந்தவரை எவரும் தப்பிவிட முடியாது.
முழுநிலவின் ஒளிநிழலில் நாமெல்லாம்
முற்றத்திலே குடும்பமாய் கூடியிருக்க,
முன்னாள் வீட்டு சோதியக்காவோடு
முத்தம்மா அக்காவும் பின்னால் வர
முழு ஊர்வம்பும் அங்கே பேசிச்சிரித்து
முடியவே சிலவேளைகளில் விடியுமே ,
மூடும் பணியில் உறைந்த நீரில் நன்கு
முளுக்கிட்டு நீர் சொட்ட வாசலில் நிற்கும்
முழிவியழத்துக்கு சிறந்த அழகி நீதானே.
முருகன் கோயிலுக்கு என்று பொய் கூறியே
முண்யடித்து வந்து குமரிகள், உன் அழகு
முத்திரைகளை பறித்து மாலை கட்டி
முடிவிலே அதை தாமே சூடிக் கொள்வர் ,
முல்லைக்காய் ஏங்கிடாத பெண்ணுமுண்டோ?
முல்லைப்பூவை எங்கு கண்டாலும் கண்
முன்னால் தரிசனமாவது மல்லியே நீ தான் .
முப்பது வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்து
முடித்து விட்டேன் இற்றைக்கு ,
முடிந்து போன சண்டையில் என்
முற்றத்தில் குண்டு விழுந்ததாய் அறிந்தேன்.
முற்றிலும் நீ அழிந்தாயோ, இல்லை
முளைத்து எனக்காய் பூத்திருப்பாயோ ?
முடிந்தால் உன்னை ஒருமுறை வந்து
முத்தமிட ஆசையடி என் அன்பு மல்லியே ,
முல்லை நேசன்