முள்ளிவாய்க்காலில் இப்போது பச்சைப் புல்லா…?

நான் ஆயிரம் பாதைகளில்
பாதங்களைப் பதித்தே
என் காலத்தைக் கடந்திருக்கிறேன்
அவை ஒவ்வொன்றிலும்
என் பாதச் சுவடுகளின் கீழ்
மிதிபட்டவை பூக்களல்ல
சகதியாய் சளசளத்த
இரத்தச் சீறல்கள்கள்
தான் அதிகமானவை
அங்கே நான்…
பூக்கள் சூடிய கூந்தல்களின்
நறுமணத்தை விட
பூவிலும் மெல்லிய இதயங்களில்
குத்திக் கிழித்த கூரிய அம்புகளையும்
கிழிபட்டுத் தொங்கிய
நாற்றத்தைத் தான்
அதிகம் நுகர்ந்திருக்கிறேன்.
வாடி கட்டி வாழ்ந்த
வாழ்க்கையைத் தொலைத்து
விட்டு தனித்து ஒற்றைக்
கூட்டில் காய்ந்து போய்க்கிடந்த
புரையோடி விட்ட புண்களைத்
தான் அதிகமாக கடந்து வந்தேன்
அழுதழுது வற்றி விட்ட
கண்ணீரைத் தேடிக் கொண்டிருக்கும்
அன்னை மண்ணில் தான்
நான் அதிகமாக
சிவந்து கிடந்த பாதங்களின்
சிவப்பை அழிக்க முடியாது
அலைந்து வந்தேன்
நாயை விட கேவலமானவராய்
கம்பி வேலிக்குள் அடைபட்டு
கதறிக் கதறியழுது
கல்லெறி வாங்கி
தூக்க வீசப்பட்ட
சோற்றுப் பொதியை
அவசரம் அவசராமாக
உண்டு தீர்த்த கேவலமான
நாட்களையும் நான்
சந்தித்திருக்கிறேன்.
சேற்றாக மண்ணில்
தேங்கிக் கிடந்த நீரை
நானும் சொறி நாயும்
நக்கிக் குடித்த நாளிகையையும்
என் பாதங்கள்
கடந்தே வந்திருந்தன
முள்ளிவாய்க்கால்
எனக்கு பல நூறு
தடங்களைப் பிரசவித்து விட்டே
இன்றும் அழுது கொண்டு இருக்கிறது.
பச்சைப் புல் முளைத்து
வளர்ந்து நிற்கிறதாக
மாயையை உருவாக்கும்
இந்த உலகுக்கு இன்னும் புரியவில்லை
பச்சைப்புல் எங்கள் குருதியின்
பச்சையத்தில் நிவந்து கிடப்பது …
கவிமகன்.இ