மூத்த இசைக்கலைமகன் „இசைவாணர்“ கண்ணன்

இலங்கையின் மூத்த இசைக்கலைமகன்
„இசைவாணர்“ கண்ணன் அவர்களின் இரண்டாவது புதல்வர் தமிழகத்தில் வாழ்ந்து,
வளர்ந்து வரும் மண்வாச இசைக்கலைமகன்
கண்ணன் „தர்ஷன்“ அவர்கள்…

ஈழமணித்திருநாட்டின் பல இசைக்குழுக்களிலும்,
விளம்பர ஒலிபரப்பிலும்,இலங்கை வானொலியிலும்
அறிவிப்புத்துறையில் புகழ் பெற்ற
„உங்களில் ஒருவன்“ லோகேஷ் அவர்களின்
நல்லாசியுடன் பதிவு செய்கின்றோம்…

இன்னிசை தானாய் இசைய,
தபேலா தாளவாத்திய லய நேர்த்தியும்,
சுரத்தட்டு விரல் வேகமும்,
ஒருசேர, இசைஞான அசைவுடன்,
பாடல் ஒலிப்பதிவுத் தேடலிலும்
தேர்ச்சி பெற்ற ,(சவுண்ட் என்ஜினியர்)
சாயிதர்சன் ஓர் சங்கீதப் பரம்பரையின்
சத்தான,நல் முத்தான சொத்தல்லவா !…?
பெத்தவர்கள் பெருமைப்பட,
*இசை வளத்தினைப் பத்திரப்படுத்தி ,
பார் புகழ்ந்து போற்ற முத்திரை பதியுங்கள்
உங்கள் இசை அமைப்பினில் என – எமது
உளம் மகிழ்ந்து வாழ்த்தி,வணங்கி,
வரவேற்கின்றோம்!!!
-„உங்களில் ஒருவன்“ லோகேஷ்.
…………………………………………………….
கண்ணன் „தர்ஷன்“
அவர் உள்ளத்தில் இருந்து சுய அறிமுகம்:
ஆரம்ப கால கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலும் பின்பு முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியிலும் கற்றேன்.நான் இசைக்குடும்பத்தில் பிறந்ததினால் இசையை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமாகவும், இலகுவாகவும் இருந்தது.
அதனால் விசைப்பலகையை (keyboard) எனது அப்பாவிடமும், அண்ணாவிடமும்,மிருதங்கம் மகேந்திரன் மாஸ்டர்,
துரைராஜசிங்கம் மாஸ்டர் மற்றும் கண்ணதாசன் மாஸ்டரிடமும்,
வாய்ப்பாட்டு (vocal) குலசிங்கம் மாஸ்டரிடமும் கற்றுக்கொண்டேன். ஒலிப்பதிவு சம்மந்தமான ஆர்வம் இருந்ததால் சிங்கப்பூர் சென்று ஒலிப்பொறியியலாளர் கற்கையை கற்று முடித்தேன்.
தற்பொழுது நாட்டின் சூழ்நிலை காரணமாக சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து சென்னையில் இசையமைப்பாளராக எனது பணியை தொடர்ந்து வருகிறேன்.

படைப்புலகின் எனது பயணமாக, ஆரம்ப காலத்தில் தபேலா வாத்தியக்கலைஞனாக இசையுலகில் அறிமுகமானேன்.
தொடர்ந்து எனது அப்பா, அண்ணா மற்றும் ஸ்ரீகுகன் அண்ணா இசையமைத்த பாடல்களுக்கு தபேலா, ஒக்ரபாட் வாத்தியக்கலைஞனாகவும்,
பின்பு 17வது வயதிலிருந்து எனது அப்பாவின் எல்லாப்பாடல்களுக்கும் விசைப்பலகை (keyboard) கலைஞனாக பணியாற்றிவந்தேன்.

முதன்முறையாக எனது 19வது வயதில் தர்மேந்திரா கலையகத்தின் பொறுப்பாளராகிய கிருபா அண்ணாவின் ஊக்கத்தினால் நான் இசையமைப்பாளராக அறிமுகமானேன்.
எனது முதலாவது பாடலாக எம் தேசத்திற்காக உயிர் நீத்த மாவீரர் பாடலான “ விடுதலை சுமந்தவனை“…
எனும் பாடலை இசையமைக்கும் பாக்கியம் எனக்குக்கிடைத்தது,
அதிலிருந்து இன்றுவரை இசையமைப்பாளராக எனது பணியை தொடர்ந்து வருகிறேன்.

மேலும்…
ஆரம்ப காலத்தில் ஈழத்தில் வெளிவந்த பெரும்பாலான
ஈழப்பாடல்கள், குறும்படங்கள், முழு நீள திரைப்படங்கள் என எனது பங்களிப்பு அமைந்தன. தற்பொழுது தமிழ்நாட்டிலும்,இலங்கையிலும் பல பாடல் தொகுப்பு மூலம் (album)
பாடல்களையும்,பல பக்திப்பாடல்களையும், விளம்பரங்களுக்கு பின்னணி இசையையும் வழங்கி இருக்கிறேன்.
இரண்டு தென்னிந்திய சினிமா திரைப்படங்களுக்கு இசையமைத்து முடித்து விட்டு அதன் வருகைக்காய் காத்திருக்கிறேன்.

நான் இசையமைத்த முழு நீள திரைப்படங்களில் சிலவற்றை இதில் குறிப்பிட விரும்புகின்றேன். ஈழத்தில் வெளிவந்த கேசவராஜாவின் இயக்கத்தில் „அம்மா நலமா“,
குயிலினி அக்காவின் இயக்கத்தில் „உப்பில் உறைந்த உதிரங்கள்“ தென்னிந்தியாவில் செந்தூரன் அண்ணாவின் இயக்கத்தில்
„அடங்கமறு“ S.K.முரளியின் இயக்கத்தில்
„வெள்ளைக்காக்கா மஞ்சக்குருவி“ எனும் படங்களைத் தொடர்ந்து என் இசைப்பணியை தொடர்ந்து வருகிறேன்.

எனது அப்பாவின் இசையில் வெளியான எல்லாப்பாடல்களுக்கும் முதல் ரசிகனாக இருந்திருக்கின்றேன்.
அத்துடன் தமிழக இசைவித்தகர்கள் திரு.இளையராஜா அவர்களினதும்,
திரு.ஏ.ஆர்.ரகுமான் அவர்களினதும் பாடல்களை அதிகமாக ரசித்து கேட்பேன்.

என் அறிமுகத்தை நிறைவு செய்யும் இவ் வேளையில் எனது தனிப்பட்ட கருத்தாக, எல்லாப்படைப்பாளிகளுக்கும் அவர்கள் துறை சார்ந்த
தேடல்கள் வேண்டும்.
எம் நாட்டைப்பொறுத்தவரையில் அந்த படைப்புகளை வெளிக்கொண்டுவருவதற்கு அத்திவாரங்களாக இருக்கும் தயாரிப்பாளர்கள் எமது படைப்பாளிகளுக்கான
வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும்.
பிறக்கின்ற அனைத்து படைப்புக்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் எமது ஊடகங்கள் எம் கலைஞர்களை வளர்க்கும் நோக்குடனும், ஊக்கப்படுத்தும் பாதையிலும் செயற்பட வேண்டும்.
என்பதனை பணிவுடன் கூறிக்கொண்டு விடை பெருகின்றேன்.

அன்பான இசைக்கலைமகன்
கண்ணன் „தர்ஷன்“ அவர்கள்…
குறையாத கலை வளமும்,
மங்காத பெரும் புகழும்,
மாசிலா நீடித்த செல்வமும்,
அன்புடை தூய்மை மிகு சுற்றமும்,
அறமறிந்த மேன்மை தரும் நட்பும்
இனிதே வாழ்வில் பெற்று
பல்லாண்டு காலம் வாழ
எமது இதயம் கனிந்த
நல் வாழ்த்துக்கள்… இசைமகனே,
மகிழ்வோடு தொடரட்டும் உங்கள் பணிகள்…

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“ பதிவு செய்யும்
இந்த தகவல்களை,தனது முகநூல் பக்க மூலம்
பதிவு செய்து உதவியதுடன்,
கலைஞர்களையும் ஊக்கப்படுத்தும்
„மண்வாசமகன்“யாழவன் ராஜன் அவர்களுக்குநன்றி…