யாழ்ப்பாணம் அளவெட்டியில் இடம்பெற்ற நெதர்லாந்து பவானி அவர்களின் நூல் வெளியீடு.

நிறைந்த பங்கேற்பாளர்களோடு யாழ்ப்பாணம் அளவெட்டியில் இடம்பெற்ற நெதர்லாந்து பவானி அவர்களின் நூல் வெளியீடு.

யாழ்ப்பாணம் அருணோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு இடம்பெற்று வரும் சிறப்பு நிகழ்வுகளின் இன்னொரு அம்சமாக, அளவெட்டியைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து நெதர்லாந்து தேசத்தில் வசிப்பவருமான பவானி சற்குணசெல்வம் அவர்களின் ‚சில கணங்கள்‘ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவானது 26.01.2020 சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் அளவெட்டியில் அமையப்பெற்ற கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு யாழ்.அருணோதயாக் கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமை வகித்தார். முன்னதாக பாடசாலை சார் கெளரவிப்பாக மாணவிகளின் இன்னிய அணிவகுப்பு இடம்பெற்றது.

சுடர் ஏற்றுதல், இறை வணக்கம், மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்து ஆகியன முறையே இடம்பெற்றன. வரவேற்புரையினை தெல்லிப்பழை பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் சி.மங்களேஸ்வரி வழங்கினார். மாணவி அபினா வழங்கிய நடனக்காட்சியினைத் தொடர்ந்து அருணோதயாக் கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையுரை நிகழ்த்தினார். வெளியீட்டுரையினை எழுத்தாளரும், ஆசிரியருமான கை.சரவணனன் ஆற்றினார். ‚சில கணங்கள்‘ நூலினை அதிபர் நா.கேதீஸ்வரன் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை சங்கீதபூசணம் வி.கே.நடராசா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூற்பிரதி பெற்றுக்கொண்டனர்.

‚1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூல் அறிமுகமாக்கப்பட்டு எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், நெதர்லாந்து பவானி ஆகியோருக்கு யோ.புரட்சி அவர்களால் வழங்கப்பட்டது.

நூலாய்வுரைகளை எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், வடமாகாண தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.வசந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். மாணவர்களின் நடனத்தினைத் தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் பவானி சற்குணசெல்வன்
வழங்கினார். நன்றியுரையினை அ.மயூரன் வழங்கினார்.

நிறைந்த பங்கேற்பாளர்களோடு இடம்பெற்ற நிகழ்வுக்கு ஓர் இலக்கிய திருப்தியே.