யேர்மனி – ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் ஒளிவிழா 15.12.18கொண்டாடப்பட்டது

யேர்மனி – ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் ஒளிவிழா – 2018 கடந்தந்திகதி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இவ்வுலகிற்கு ஒளியாகவந்து எமது வாழ்வில் வெளிச்சத்தினை படரவிட்ட யேசுபாலனின் பிறப்பினை உலகெங்கும் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இந்த ஆண்டும் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை பொருமையோடும் மகிழ்வோடும் நடாத்திய இந்த விழாவில் எமது பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நத்தார் தாத்தாவின் வருகை மற்றும்; விருந்துபசாரமும் சிறப்பம்சங்களாக அமைந்தன. எமது பாடசாலை மாணவர்களினால் தமிழ்மொழி வாழ்த்து மற்றும் பாடசாலை கீதத்துடன் ஆரம்பமான நிகழ்வானது, எமது பாடசாலையின் பழைய மாணவர்களில் ஒருவரான செல்வி ருபில்டா மரியதாஸ் அவர்களின் வழிநடாத்தலில் ஒளியேற்றல் நிகழ்வும் செல்வி பரிஷ்ரா மரியதாஸ் வழங்கிய புனித விவிலியத்திலிருந்து நற்சிந்தனைகளுடனும் மங்களகரமாக ஒளிவிழா ஆரம்பமாகின. யேர்மனி தமிழ்க்கல்விச் சேவையின் உப தலைவியும், எமது பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியையுமான திருமதி கலா மகேந்திரன் அவர்களின் வரவேற்புரையுடன், எனது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு யேர்மனி தமிழ்க்கல்விச் சேவையின் தலைவரும் டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் பொறுப்பாசிரியருமான தமிழ்மணி பொன்.ஸ்ரீஜீவகன் அவர்கள் பிரதம விருந்திராகக் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கியதுடன்: மாணவர்களுக்குப் பரிசில்களையும் வழங்கி விழாவுக்கு மேலும் சிறப்புசேர்த்தார். எமது பாடசாலையின் உயர்வகுப்பு மாணவர்களின் நிகழ்ச்சித் தொகுப்புடனும் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்த நிகழ்வுகளில், மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட பெற்றோருக்கான பொது அறிவு வினாவிடைப்போட்டியும் இதர மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் சிறப்புடன் நடைபெற்றன. எமது பாடசாலையின் பழைய மாணவர்களினது நடன நிகழ்வுகளும், இளையவர்களின் கவிதை மற்றும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவினை முழுமைசெய்தன. விழாவின்போது தாயக மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி நிதி சேகரிக்கப்பட்டு, யேர்மனி தமிழ்க்கல்விச் சேவையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களினால் தமிழ்க்கல்விச் சேவையின் தலைவர் பொன்.ஸ்ரீஜீவகன் அவர்களிடம் ஒப்படைப்பட்டது. சுமார் 11.15 அளவில் தொடங்கிய கொண்டாட்டம் மதிய உணவு விருந்துடனும் தேநீர் உபசாரத்துடனும் நத்தார்த் தாத்தாவின் ஆடல் பாடலுடனுடனான பரிசளிப்புகளுடனும் 15.15 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது….