ரோஜா முலம் பூசப்பட்ட கம்பிகள்…!கவிதை கவிமகன்

என் வீட்டு முற்றம்
புதிதாக அடிக்கப்பட்ட
வேலியால் புது வாசனை
பெற்றிருந்தது

ரோஜா இதழ் கம கமத்தது
அங்காங்கே மின்னும்
கந்தக உதட்டு சாயங்களும்
என்னை பார்த்து சிரித்தன

கரங்களில் மினுமினுத்தன
அதுவரை என்னையும்
என் வீட்டையும் தின்று ஏப்பம்
விட்ட இரும்பு பூங்கொத்துக்கள்

வேலியின் மெல்லிடை
தழுவிய இடம் முழுக்க
துரு ஏறிய இரும்பு முட்கள்
நிமிர்ந்து நின்றன

கண்ணுக்கும் மனதுக்கும்
அதன் கூர்மை தெரிந்தே இருந்தது
என் சிரம் ஏற்க மறுத்தது
மனம் வழி இன்றித் தவித்தது

வாயு பகவானின் பலம்
பெற்றிருந்த பீமன்
நானான போதும்
என் வீடு சிதைக்கப்பட்டது

காந்தாரியின் பார்வை
வீச்சில் பலம் பெற்றவனின்
பலவீனத்தை எனக்கு காட்ட
கிருஷ்ணன் தவறிவிட்டான்

என் வீட்டில் பரவி விட்டன
காட்டு விச செடிகள்
பிடுங்கி எறியும் வெட்டாயுதம்
என்னிடம் மௌனித்து விட்டது

நான் விசச் செடிகளை
என் கரங்களால் இறுதி வரை
வெட்டி இருக்கலாம் அதன்
நாக்குகளுக்குள் அகப்பட்டிருக்கலாம்

அந்த கரு நீல விடமேறிய
கொடும் பற்களின் தீண்டுகையில்
என் வீட்டுக்குள்ளே வீரனாய்
செத்து மடிந்திருக்கலாம்

வாழ ஆசை கொண்டேன்
விச செடிகளை வெட்டுவதற்கு
கரங்கள் எழுந்தும்
வெற்று கரத்தால் முடியவில்லை

விழிகள் பார்க்கின்றன
கந்தக ரோஜா பூக்களால்
அழகுபடுத்தப் பட்டிருந்த
துருக் கம்பி வேலியை.

அதன் இரும்பு முட்கள்
கோரமாய் கை நீட்டின
நானும் பூசப்பட்டிருந்த
ரோஜா முலத்தை பார்த்தேன்

சுகமான வாசம் தரும்
அணிந்திருந்த வெண்ணிற
சட்டை வாசம் வீசும்
நம்பிக்கைகள் இல்லை

நம்ப வேண்டிய நிலையில்
வேலியை கரம் பிடித்தேன்
மெல்ல இரும்பு முட்கள்
குத்த தொடங்கின

வெட்டுண்டு போகலாம்
குத்தி குதறப்படலாம்
இரத்தம் உறிஞ்சப்படலாம்
தெரிந்தே வேலியை கரம்பிடித்தேன்

நான் நிர்வாணமாக்கப்பட்டேன்
கண்கள் குத்தி குதறப்பட்டன
துருக் கட்டி இருந்த
கம்பிகள் விசத்தை கக்கின

நானோ வலிக்கு
மருந்து கேட்டேன்
மறுக்கப்பட்டு மீண்டும்
விசம் தெளிக்கப்பட்டது

சிரித்துக் கொண்டிருந்தனர்
என் வீட்டு உறவுகள்
விசச் செடிகளில் இருந்து
தப்பி விட்டதாய் நினைத்தனர்

ரோஜா தோட்டத்திற்குள்
சுகந்தம் கிடைக்கும் என்று
நம்பிக்கையோடு சிரித்தனர்
அதன் கொடும் விசத்தை அறியாமலே….

*****************************
ஆக்கம் இரத்தினம் கவிமகன்…