வண்ணக்கிளி சொன்னமொழி… – இந்துமகேஷ்

தனக்கென்று கூடுகட்டத்தெரியாத குயில், காகத்தின் கூட்டில் முட்டையிட்டு விட்டுப் போய்விடுகிறது. முட்டைகளில் பேதமறியாது அடைகாத்துப் பொரித்துவிட்டு „கா…கா“ என்பதற்குப் பதிலாக „கூ…கூ!“ என்று அது குரலெழுப்பும் போதுதான் „இது என் குஞ்சல்ல!“ என்று அடையாளம் கண்டு அதை விரட்டுகிறது காகம்.

பிறர்கூட்டில் பிறந்துவிட்டோமே என்பதற்காகத் தன் மொழியை இழப்பதில்லை குயில். பிறமொழி பேசும் இன்னோரினம் தன்கூட்டில் இருப்பதை அனுமதிப்பதில்லை காகம். குயிலுக்கு மொழிப்பற்று. காகத்துக்கு மொழிவெறி என்பதுபோலத் தோற்றம் காட்டினாலும் இரண்டுமே தத்தம் மொழியை இழந்துவிடத் தயாராயில்லை என்பதே உண்மை.

„வேற்றுமொழியைக் கற்றுக் கொண்டு அந்த இனத்தோடு அனுசரித்துப் போ!“ என்று குயிலுக்கோ காகத்துக்கோ இயற்கை கற்றுத் தரவில்லை. அதனால் அவை எவரிடத்தும் இலகுவில் சிறைப்படுவதில்லை. ஆனால் பாவம் கிளி!மனிதமொழியைத் தன்னாலும் பேசமுடியும் என்று ஒருமுறை அது ஒப்புவித்ததால் வந்தது வினை. பலரது வீடுகளில் அது தனிமைச் சிறைக்குள் வாடிக் கிடக்கிறது.“கிக்கீ” என்று இனியமொழி பேசி தன் இனத்தோடு சேர்ந்து வாழமுடியாமல் இருண்ட எதிர்காலத்துக்குள் முடங்கிப் போகிறது அதன் வாழ்வு.

தனது வாழ்வைச் சரிசெய்யத் தெரியாத மனிதனின் கைகளில் சிக்குண்டு “சாத்திரக் கிளிகளாக” சில கிளிகள் சோதிடம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கிளியின் அழகு அதனைத் தன்வீட்டில் வளர்க்கும் ஆசையை மனிதனிடம் தூண்டிவிட்டது. பாவம் பண்ணிய கிளிகள்மட்டும் ஆங்காங்கே சிறைத் தண்டனைக்குள் சிக்கிக்கொள்ள ஏனையவை உல்லாசமாக உலகெங்கும் உலாவருகின்றன.

“எங்கள் வீட்டிலும் நாங்கள் கிளி வளர்க்கிறோம். அதற்கு ஒரு குறையுமில்லை.அழகான கூண்டு. அதற்குள் அது விரும்பியநேரத்தில் உண்டு பசியாற பால் பழம் என்றுகொடுத்து வருகிறோம். இதைவிட அதற்கு வேறு என்ன வேண்டும்?” என்று கிளிவளர்க்கும் மனிதர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதன் சுதந்திரமும் ஆனந்தவாழ்வும் பறிபோயிருப்பது அவர்களது அறிவுக் கண்களுக்குத் தெரிவதில்லை.

அழகு என்பது இரசிப்பதற்கு மட்டும்தான் என்றிருக்கும்வரை அதனால் எவருக்கும் எந்தத் தீங்கும் விளையப் போவதில்லை. ஆனால் அழகாகத் தெரிவதெல்லாம் தங்கள் கைகளுக்குள் அகப்பட்டாகவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்ப ஆரம்பித்துவிட்டால் உலகம் அழிவுப் தைக்குள் தள்ளப்பட்டுவிடும்.
பச்சைக் கிளிமுதல் பஞ்சவர்ணக் கிளிவரை வர்ணக்கோலம் காட்டும் அந்தப் பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்துதிரியும் அழகைச் சற்றுத் தொலைவிலிருந்து இரசிக்கும்போது எத்தனை இனிமையாயிருக்கிறது. கூண்டுக்குள் வாடும் கிளியின் முகத்தில் அந்த அழகு இருக்குமா? அல்லது அதைப் பார்த்து இரசிக்கத்தான் முடியுமா?

திருமண பந்தத்துக்குள் ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் இணைத்து வைப்பதற்கான பெண்பார்க்கும் படலத்தில் ஒரு உரையாடல்:
“உங்கள் மகனுக்குப் பெண் பார்த்தீர்களே! எப்படி?”
“ம்.. கிளிபோலப் பிள்ளை என்று தரகர் சொன்னார். அதனால் போய்ப் பார்க்கவில்லை!“
„ என்ன இது புதுக்கதை? கிளிபோல மூக்கும் முழியுமாய் இருக்கவேண்டும் என்றுதானே எல்லாரும் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஒரு பெண்பிள்ளை கிடைத்தும் நீங்கள் ஏன் போய்ப் பார்க்கவில்லை?“
„தரகர் அந்தப் பிள்ளையின் அழகைமட்டும் சொல்லவில்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோல என்று அவளது குணத்தைத்தான் சொல்லியிருக்கிறார். சொல்வார் சொல்கேட்டு நடக்கிற பிள்ளை தன் குடும்பத்தை எப்படி நிர்வகிப்பாள்? அதுதான் போகவில்லை!“

அழகான கிளிகள்கூட சில இடங்களில் மதிக்கப்படுவதில்லை என்பது சோகம்தான். கிளிபோலப் பெண்ணைப் பெற்றவன் அதைப் பூனை கையில் கட்டிக் கொடுப்பதை விட அதைச் சுதந்திரமாக வாழவிடுவதே மேல்.கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா?
பூனை கையில் கொடுப்பதெல்லாம் இருக்கட்டும். முதலில் கிளியை வளர்க்கலாமா?
வேண்டாம் அதைச் சுதந்திரமாக வளரவிடுங்கள்!

(பிரசுரம்: வெற்றிமணி 2010)