வளையோசை !கவிதை ஈழத் தென்றல்

தளிர் மேனி என்றும் தனிமையில் வாட
தாளாத சோகம் நெஞ்சில் மோத
நெருஞ்சி முட்கள் நெஞ்சில் வேக
தாங்க முடியா சோகம் தானோ

காதணி பறித்தீர், கழுத்தணி பறித்தீர்
கொலுசை பறித்தீர், கண்ணீரை தந்தீர்
மலர் என்பதாலோ அதனையும் பறித்தீர்
மனம் நொந்த எந்தன் வேதனை அறியீர்

பள்ளி நாள் தொட்டே கலகலத்த வளையல்
கைகளில் என்றுமே சலசலத்த வளையல்
கொண்டவன் நிழலில் தனிமை கொண்ட போதும்
ஒவ்வாமை இன்றியே ஒன்றிய வளையல்

எடுத்தவை எல்லாம் தொலைந்தே போக
வளையலை மட்டும் உடைத்து விடாதீர்
என்னவன் கொண்ட உரிமையின் இரகசியம்
அவற்றிடம் கதைத்தே தனிமையை தொலைப்பேன்!

ஆக்கம் ஈழத் தென்றல்