***வாராயோ வெண்ணிலவே***


ஆடாது அசையாது நின்று
ஆசை மூட்டும் அழகிய
ஆகாயத் தாமரையே!! என்றும்
ஆடை கட்டி அறியாத எந்தன்
அம்புலியே இங்கு வாராயோ.!!!
*
தேடக் கிடைத்திடாத, செந் –
தேன் சொரியும் தெளிந்த,
தேயாத முழுநிலவே, நீயும்
தெள்ளமுது கொண்டு வாராயோ!!

பாடத்தோணுதடி உன்னை
பார்க்கையிலே என் பௌர்ணமியே,!!
பரவசமாகுதடி ,என்மேல் உந்தன்
பாலொளி பட்டுத்தெறிக்கையிலே.
*
வாடாத வண்ணமுகம்கொண்ட
வடிவழகி என்றும் நீயன்றோ.
வாசல்தேடி வந்திங்கு , காயும் ,
வானத்து வட்டநிலவே வாராயோ.
*
மூடத்திரியுமந்த கருந்திரை
முகில்களை நீயும் எரிக்காயோ!
முந்தியோடும் அந்த வெண்பஞ்சு
முகில்களை நீயும் விரட்டிடாயோ!
*
சூடட்டுமா ? உனை பறித்து என்
சுந்தரியின் சுருண்ட கூந்தலுக்கு,
சுட்டு விடாது, நீயும் அவளுக்கு
சூடாமணியாக ஒளிவீச வாராயோ .
=
நிலா நேசன்